பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


128 பூர்ணசந்திரோதயம்-2 சுத்தமான குளிர்காற்று உள்ளே நுழைந்து அந்த அறையிலிருந்து துர்நாற்றத்தை எல்லாம் வெளிப்படுத்தியது. பைத்தியம் கொண்டவள்போல உருட்டி உருட்டி விழித்து திக் பிரமை கொண்டவளாய் நின்ற தனது மனைவியின் கையைப் பிடித்து அந்த மனிதர் இழுத்துக்கொண்டு போய் வென்னீர் அண்டாவின் பக்கத்தில் நிற்க வைத்து, “குனிந்து உள்ளே பார்; உன்னுடைய ஆசைநாயகர் இருக்கிறார். அநேக நாளாய் அவரை நீ இங்கே வைத்துவிட்டுப் போய்விட்டதைப் பற்றி அவர் கோபித்துக் கொண்டு வெளியில் வரமாட்டேன் என்கிறார். நீ உன் கையை உள்ளேவிட்டு அவரைப் பிடித்து வெளியில் தூக்கிவிடு' என்று கூறியவண்ணம் லாந்தரை எடுத்து அண்டாவின் வாயண்டை வைத்துக்கொள்ள, அந்த மகாபரிதாபகரமான பெண்ணின் கண்பார்வை தானாகவே உள்ளே சென்று அவ்விடத்தில் என்ன இருக்கிறது என்று பார்த்தது. பார்த்தவுடனே, அவள்தன்னை மறந்து ஐயோவென்று அலறி, 'அண்டாவுக்குள் ஏதோ ஒரு பினமல்லவா இருக்கிறது! இது யாருடைய பினம் ? இந்த அண்டாவிற்குள் எப்படி வந்தது?’ என்று மிகுந்த வியப்போடு கூறினாள். அதைக் கேட்ட அந்தப் புருஷர் ரெளத்திராகாரமான கோபம் கொண்டு “ஆகா! இன்னமுமா சாகஸம் செய்கிறாய்? உன்னுடைய படுக்கையறைக்குப் பக்கத்தில் உள்ள வென்னீர் அண்டாவில் வந்து மறைந்துகொள்ளக்கூடிய மனிதன் இன்னான் என்பது உனக்குத் தெரியவில்லையா? இன்னமும் என்னை ஏமாற்ற எண்ணுகிறாயா? அன்றையதினம் ராத்திரி நீ உன்னுடைய நகைப்பெட்டியை இந்த அண்டாவின்மேல் வைத்துவிட்டுக் கடைசிவரையில் நாடகம் ஆடியதை நான் கவனிக்கவில்லை - என்று எண்ணிக்கொண்டாயா மோதிரத்தைத் தேடுவதாகச் சொல்லி என்னை முன்னால் வண்டியில் ஏறிக்கொள்ளும்படி அனுப்பியவள் அல்லவா நீ? என்னை அனுப்பிவிட்டு நீ தனியாக இருந்து இந்த நல்ல புருஷனிடம் காதல் மொழி பேசி உத்தரவு வாங்கிக் கொண்டு வர நினைத்தாயோ, அல்லது