பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22 பூர்ணசந்திரோதயம்-2 திரும்பவும் அத்தர் அம்பர் முதலிய உயர்தரப் பரிமள கந்தங்களைத் தனது ஆடைகளிலும் புஷ்பங்களிலும் பெய்து கொண்டதன்றி, தனது உடம்பிலும் திமிர்ந்து கொண்டவளாய், நிலைக் கண்ணாடியண்டை சென்று, அதற்கு எதிரில் நின்று பார்க்க, அந்தக் கோமளாங்கி தனது கண்களை நம்பாமல் பிரமித்து ஸ்தம்பித்து மோகித்து நின்றாள். தனது தோற்றம் ஒரே ஜெகஜ்ஜோதியாகவும், மகாவசீகரமாகவும் எப்படிப்பட்டவரது மனதையும் ஒரு நொடியில் மயக்கி உன்மத்தம் உண்டாக்கத் தக்கதாகவும் இருந்ததைக் கண்டு தான் பூர்ணசந்திரோதயம் தானோ என்று தனக்குத்தானே பன்முறை சந்தேகித்தவளாய், தனது முடிமுதல் அடிவரையிலுள்ள ஒவ்வோர் அங்கத்தின் நிகரற்ற எழிலையும் பார்த்துப் பார்த்துக் குதூகலமும் பேரு வகையும் கொண்டவளாய், மண்ணுலகத்து மண்டலேசுவரி போலவும் விண்ணுலகத்து இந்திராணி போலவும் அழகுத் திரளாகவும், இன்பப் பிழம் பாகவும், ஜோதி மயமாகவும், கவர்ச்சிக் களஞ்சியமாகவும் தோன்றி நிரம் பவும் திருப்தி அடைந்தவளாய், சிறிது நின்றபின், முதல்நாள் இளவரசர் தம்மை மூடிக் கொண்டு வந்த பனாரீஸ் அங்கியொன்றை அவள் முன்னாகவே தயாரித்து வைத்திருந்தாள் ஆதலால், அதை எடுத்துத் தனது தலையில் மாட்டி முகம் உடம்பு முதலிய எல்லா அங்கங்களையும் மறைத்துக் கொண்டாள். முகத்தில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு துளைகளின் வழியாக அவளது கயல்விழிகள் மகா வசீகரமாக ஜ்வலித்தன. பாதங்களில் இருந்த வெல்வெட்டு ஜோடுகளும், தந்தத்தில் கடைந் தெடுக்கப் பட்டவைபோல இருந்த மாசுமறுவற்ற மகா சுத்தமான அவளது பாதங்களில் சொற்ப பாகமுமே அங்கிக்குக் கீழே தெரிந்தன. அவளது உடம்பில் இருந்த மலர்களின் மணமும், பரிமளகந்தங்களின் கமழ்வும் ஒன்றுகூடி, அவளது அங்கிக்கு வெளியில் வந்து நெடுந்துரம் பரவி காந்தம் இரும்பைத் தேடிக் கவர்வது போல நெடுந்துாரத்தில் இருந்தோரது நாசிகளை எல்லாம் வசீகரித்து ஈர்த்தன.