பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


56 பூர்ணசந்திரோதயம்-2 சொன்ன குறிப்பை வைத்துக்கொண்டு அந்த பங்களாதான் அவளுடைய ஜாகையாக இருக்க வேண்டும் என்று நிச்சயித்துக் கொண்ட அந்தப் பேருபகாரி, தமது வண்டியை பங்களாவின் வாசலில் நிறுத்திப் பின்புறம் திரும்பி, 'அம்மா இதுதானா உன்னுடைய ஜாகை? பாரம் மா!' என்று அன்பொழுகக் கூற, அப்போதே தனது மயக்கத்திலிருந்து நன்றாகத் தெளிவடைந்து கண்களைத் திறந்து பார்த்த நமது பெண்ணரசி சொப்பனத்தில் இருப்பவள் போல அப்போதும் தனது கண்களை நம்பாதவளாய்ச் சிறிது நேரம் அங்கும் இங்கும் மருட்சியாகத் திரும்பிப்பார்த்து அதுவே தனது பங்களா என்று நிச்சயப்படுத்திக் கொண்டவளாய், "ஆம், இதுதான் எங்களுடைய ஜாகை' என்று நிரம் பவும் பணிவாகவும் அழகாகவும் மறுமொழி கூறியவண்ணம் மெதுவாகப் பின்புறம் நகர்ந்து வண்டியை விட்டுக் கீழே இறங்கினாள். அந்தப் பங்களாவின் முன்புறத்திலிருந்த இரும்புக் கம்பிகளால் ஆன கதவுகள் உட்புறத்தில் பூட்டப்பட்டு இருந்தன. ஆகையால், ஷண்முகவடிவு கதவண்டை வந்துநின்று, 'முத்தம் மா! முக்தம்மா' என்றுமிருதுவானதனது இனிய மெல்லிய குரலால் இரண்டடொரு தரம் தனது வேலைக்காரியை அழைக்கத் தொடங்கினாள். அந்தத் தோட்டத்திற்குள் அவர்கள் வசித்த கட்டிடம் சிறிது துரத்திற்கு அப்பால் இருந்ததாலும், அப்போது இரவு சுமார் 9% மணி நேரமாகி விட்டது ஆகையாலும், அந்த வேலைக்காரி ஷண்முக வடிவின் வருகையை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து சஞ்சலக்கடலில் ஆழ்ந்தவளாய்க் காத்துக் காத்துக் கடைசியில் நித்திரையில் ஆழ்ந்து விட்டாள். ஆனாலும், அந்த இளந்தோகை குயில் போன்ற தனது மிருதுவான குரலால் அவளை அழைத்தது உட்புறத்தில் கேட்கவில்லை. அதை உணர்ந்துகொண்ட அந்த யெளவனப் புருஷர் கதவண்டை போய் நின்று, "முத்தம்மா முத்தம் மா!' என்று பன்முறை உரக்கக் கூவி அழைத்துப் பார்த்தார். அப்போதும் முத்தம்மாள் வரவில்லை.