பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i52 பூர்ணசந்திரோதயம்-3 ஆகையால், அவர்கள் உன்னை அவ்வளவாக மதிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட இடத்தில் நீ ஒருத்தியாக இருந்து கொண்டு இத்தனை காரியங்களையும் எப்படி கவனிக்க முடியும்? ஆகையால், நீ உன்னுடைய பெரிய தகப்பனாருடைய ஜாகைக்கே போய்விடுவது உத்தமமாக இருக்கும். உனக்குத் தேவையான யோசனைகளை எல்லாம் அவரே சொல்வதன்றி சகலமான உதவிகளையும் அவரே செய்வார். அதுவும் அல்லாமல் உன் பெரிய தகப்பனாருடைய ஜாகைக்கு இளவரசர் அடிக்கடி வருவார். அந்தச் சமயத்தில் நீ அவரைக் கண்டு பேசி, அவரால் நமக்கு ஆகவேண்டிய கடைசிக் காரியத்தையும் சுலபத்தில் முடித்துக்கொள்ளலாம்; எல்லாவற்றையும் நீயே யோசித்து உன்னுடைய மனசுக்கு எது உசிதமாகத் தோன்றுகிறதோ, அதைச் செய்' என்றார். லீலாவதி அப்போதே ஒரு புதிய சங்கதியை அறிந்து கொண்டவள்போல நடித்து, 'ஆம். நீங்கள் சொல்வதும் உண்மைதான். நான் புதிய இடத்தில் இருந்தால் எனக்கு அதிக செல்வாக்கு இருக்காது என்பது உண்மையானால், அதைப்பற்றி நான் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. இளவரசர் என் பெரிய தகப்பனாருடைய ஜாகைக்கு அடிக்கடி வருவார் என்றும், அவரை நான் கண்டு முடிவான காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் நீங்கள் சொன்னதுதான் முக்கியமான விஷயம். அது என் புத்தியில் முதலில் படவில்லை. நீங்கள் சொன்ன பிறகுதான் பட்டது. எவருக்கும் தெரியாமல் நான் இளவரசரைச் சந்திப்பதற்கு எங்களுடைய ஜாகைதான் தகுதியானது. நான் புதிய இடத்தில் இருந்தால் அவர் என்னுடைய ஜாகைக்கு வரமாட்டார். நான் அவருடைய இருப்பிடத்தைத் தேடி அலைந்து அவருடைய சமூகம் பார்த்து அவரைச் சந்திக்க வேண்டும். நான் எங்கே இருந்தால் என்ன; உங்களுடைய உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயம். ஆகையால், நீங்கள் சொல்லும் யோசனைப்படியே செய்கிறேன்' என்றாள்.