பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 253 வந்த இடத்தில் எதிரில் அவர்கள் வந்துகொண்டிருப்பதைக் கண்டு பயந்து இப்படி வந்தேன்’ என்றாள்.

உடனே கிழவி, ‘சரி; எப்படியாவது இருக்கட்டும் வா; உள்ளே போகலாம்’ என்று அன்பாகக் கூறி வரவேற்றவளாய் விளக்கோடு உள்ளே செல்ல, ஷண்முகவடிவும் அவளைத் தொடர்ந்து உள்ளே நுழைந்தாள். முன் பக்கத்துக் கதவு உடனே மூடித்தாளிடப் பெற்றது.

கிழவி கையில் விளக்கோடு ஷண்முகவடிவை அழைத்துக் கொண்டு நடை, தாழ்வாரம், கூடம் முதலிய இடங்களைக் கடந்து இரண்டாங் கட்டிற்குச்சென்றாள். அங்கே இருந்த கூடம், முற்றம் முதலிய ஒவ்வோரிடமும் நிரம்பவும் விசாலமானதாக இருந்தன. ஆகையால், அது ஒரு சத்திரமென்பது எளிதில் தெரிந்தது. முன்கட்டில் மனிதரே காணப்படவில்லை. ஷண்முகவடிவு கிழவியை நோக்கி, ‘ஏனம் மா! இவ்வளவு பெரிய இடத்தில் நீங்கள் மாத்திரம் தனியாகவே இருக்கிறீர்கள்? இது சத்திரம் போல பிரம் மாண்டமான கட்டிடமாக இருக்கிறதே!’ என்றாள்.

உடனே கிழவி, ‘இது குடியிருக்கும் வீடல்ல. இது ஒரு மடம். இவ்விடத்தில் பொது ஜனங்களுக்கு சாப்பாடு முதலியவை நடப்பதில்லை. முன்கட்டில் பஜனைக்கூடம் ஒன்றிருக்கிறது. அவ்விடத்தில் விக்கிரகங்களும் படங்களும் இருக்கின்றன. என் தம்பி இந்தப் பஜனை மடத்தில் சாமிக்குப் பூஜை செய்கிறவர். அவர் காஷாயம் வாங்கிக்கொண்ட சந்நியாசி. அவரும் நானும் பின்கட்டில் குடியிருந்து வருகிறோம். இந்த மடம் முழுதும் எங்களுடைய நிர்வாகத்தில் தான் இருக்கிறது. இங்கே வேறே மனிதர் யாரும் வரவே மாட்டார்கள்’ என்றாள்.

ஷண்முகவடிவு, ‘ஒகோ! அப்படியா! இப்போது உங்கள் தம்பியார் எங்கே இருக்கிறார்கள்?’ என்றாள்.

கிழவி, ‘அவர் இப்போது இரண்டாங் கட்டில் படுத்துத் துங்கிக் கொண்டிருக்கிறார்’ என்றாள்.