பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பூர்ணசந்திரோதயம்-4

அந்த வரலாற்றைக்கேட்ட மகா பரிசுத்த மனதையுடைய ஷண்முகவடிவு, ‘என்ன ஆச்சரியம்! அப்படியும் ஒரு பெண் பிள்ளை நடந்து கொள்வாளா அவள்தான் தாசி என்கிறீர்கள். அவள் தன் ஜாதித் தொழிலுக்குத் தகுந்தபடி நடந்துகொள்வது இயற்கை. ஆனாலும் இந்த ஊரிலுள்ள இளவரசரும் மற்ற பெரிய மனிதரும் அவள் விஷயத்தில் பந்தயம் வைத்ததும், அவளை இளவரசர் அழைத்துக் கொண்டு போய் ஏழாவது உப்பரிகையில் வைத்து இருப்பதும், கலியாணம் செய்து கொள்ள உத்தேசிப்பதும் நிரம்பவும் கேவலமானகாரியமாகவும் காதால் கேட்பதற்கே, அசங்கியமான சங்கதியாகவும் இருக்கிறதே. இந்த வரலாற்றை என் காதால் நான் கேட்கும்படி நேர்ந்ததைப் பற்றி நான் மிகவும் வருந்துகிறேன். இந்தப் பூர்ணசந்திரோதயத்தைப் போன்ற பெண்பிள்ளைகளை எல்லாம் ஈசுவரன் எதற்காகப் படைத்து மற்ற யோக்கியமான ஸ்திரீகளுக்கெல்லாம் ஒரு பெரிய களங்கத்தை உண்டாக்கு கிறானோ தெரியவில்லை. இப்படிப்பட்ட துன்மார்க்கர்கள் சேர்ந்து நடத்தும் விருந்துகளில் உங்கள் தமயனாரும் போய்க்கலந்து கொள்கிறார் என்ற விஷயமும் மற்றதைவிட அதிகமாய் மனசை வதைக்கிறது. இப்படிப்பட்ட பெரிய பட்டணங்களில், மனிதர்கள் சன்மார்க்கத்தில் நடக்க வேண்டும் என்பதைப்பற்றி கேள்வி முறையில்லையென்றே நினைக்கிறேன். குக்கிராமங்களில் இப்படிப்பட்ட அக்கிரமம் நடந்தால், ஜனங்கள் அவர்களை அந்த ஊரிலேயே வைக்க விட மாட்டார்கள்; அவர்கள் இரவோடு இரவாய் ஊரைவிட்டு ஒடி வந்துவிட வேண்டியிருக்கும். இந்த விவரங்களை எல்லாம் கேட்டபிறகு எனக்கு இந்த ஊரில் இருப்பதற்கே கொஞ்சமும் இஷ்டமில்லாமல் இருக்கின்றது. என்னுடைய அக்காள் இத்தனை காலமாக இந்த ஊரில் எப்படி இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாளோ தெரியவில்லையே’

எனறாள. -