பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பூர்ணசந்திரோதயம் - 5 இருப்பதாகவும், அவள் தஞ்சையில் ஒருமாத காலம் இருந்து விட்டு வர உத்தேசித்திருப்பதால், வேலைக்காரி முன்னால் திருவாரூருக்குப் போய் விடும் படி தன்னிடம் செய்தி சொன்னதாகவும் வேலைக்காரியிடம் தெரிவித்தாள். ஆதலால், அவள் அதை உண்மையென்று நம்பி மறுநாளே தஞ்சையை விட்டுப் பிரயாணமாகி திருவாரூர் போய்ச் சேர்ந்துவிட்டாள்.

ஆகவே, நீலமேகம் பிள்ளை திருவாரூருக்குப் போய், நீலலோசனி அம்மாளின் பங்களாவை அடைந்து விசாரித்த காலத்தில், கமலம், ஷண்முகவடிவு ஆகிய இருவரும் தஞ்சையில் சோமசுந்தரம் பிள்ளையென்ற ஒரு தனிகரது மாளிகையில் இருப்பதாகவும், அந்த மாளிகை சக்கா நாயக்கர் தெருவில் 13வது இலக்கமுள்ளதென்றும், கமலம் தஞ்சைக்குச் சென்று பல மாதங்களாயிற்று என்றும், சோமசுந்தரம் பிள்ளை என்ற சீமான் அவளைத் தமது அபிமான புத்திரியாக பாவித்து அவ்விடத்திலேயே வைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் வேலைக்காரிகள் நீலமேகம் பிள்ளையிடம் தெரிவித்தனர்.

அந்த வரலாற்றைக் கேட்டவுடனே நீலமேகம் பிள்ளை அளவற்ற வியப்பும் பிரமிப்பும் கவலையும் அடைந்து சஞ்சலமுற்று வருந்தலானார். தமது தந்தை எழுதி வைத்திருந்த உயிலிலிருந்து அவர் சோமசுந்தரம் பிள்ளையென்ற பொய்யான ஒரு பெயரால், அவர்களுக்குப் பணம் அனுப்பி உதவி செய்து வந்தார் என்பதை நீலமேகம் பிள்ளை அறிந்தவர். ஆதலால், கமலம் முதலியோர் சோமசுந்தரம் பிள்ளையின் மாளிகையில் இருக்கிறார்கள் என்ற செய்தி முற்றிலும் அசம்பாவிதமாக இருந்தது. அதுவுமன்றி, சில மாத காலத்திற்கு முன் தாம் தமது தந்தையைக் காணாது துயருற்றிருந்த காலத்தில் ஒரு யெளவன ஸ்திரீ மேல ராஜ வீதியிலுள்ள தமது மாளிகைக்கு வந்து சோமசுந்தரம்பிள்ளை என்பவரைப் பற்றி விசாரித்தது.அப்போது அவருக்கு நினைவு உண்டாயிற்று. ஆதலால் அவளே கமலமாக இருக்கவேண்டுமென்று அவர் நிச்சயித்துக் கொண்டார்.