பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னேற்றம்

33


அளவுகோல். அதற்கு மாறானதெல்லாம் மனித சமூகத்தின் கீழ்நிலையையே காட்டுவதாகும்.

இந்த உண்மையைப் பல சான்றோர்களும் அறிவாளிகளும் எடுத்துப் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும் மனிதன் அதைக் காதில் வாங்கிக் கொள்வதில்லை. அவன் எப்படியாவது மற்றவர்களை விட மிகுதியாக இன்பமடைய வேண்டுமென்று பிறரை வஞ்சிக்க வழி கண்டுபிடிக்கிறான். பிறரை வஞ்சிப்பதாலும் அழிப்பதாலுந்தான் தன் இன்பத்தைப் பெருக்கிக்கொள்ள முடியுமென்று தவறாக எண்ணுகிறான்.

ஒருவன் மற்றவர்களைக் கொல்ல ஓர் அழிபடை செய்தால் அதற்கு ஈடுசொல்ல மற்றோர் படையை வேறொருவன் செய்வான் என்பதை மனிதன் எண்ணிப் பார்ப்பதில்லை. பறக்கும் குண்டை உண்டாக்கியவன் தன்னைப்போல வலிமை படைத்தவன் இல்லை என்று மார் தட்டுகிறான்; உலகத்தைத் தன் காலில் மிதித்து நசுக்கி விடலாம் என்று கனவு காண்கிறான். பிறகு அணுக்குண்டைத் துாக்கிக் கொண்டு வேறொருவன் தனக்கு நிகர் யாருமில்லை என்று கிளம்புகிறான்.

இந்தப் போட்டியில் மனிதன், தான் மனிதன் என்பதையே மறந்து விலங்காய் விடுகிறான். இது இப்படியே போய்க்கொண்டிருந்தால் மனித இனத்தின் அழிவு மிக விரைவில் ஏற்பட்டுவிடும்.

மக்கட் கூட்டம் இன்பத்தோடு இந்த உலகத்திலே நிலை பெற்று வாழவேண்டுமானால் அதன் குறுகிய தன்னல மனப் பான்மையையும், பேராசையையும், தற்பெருமையையும் இன்றே உதறித் தள்ளிவிடவேண்டும்; முன்னேற்றத்தின் சின்னமாக இன்று விளங்கும் குண்டுகளையும் ஆழமான கடலிலே கொட்டி விட வேண்டும்

பூ.கி-3