பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

பூவின் சிரிப்பு


கணித அறிஞர்கள் சொல்லுகிறார்கள்: "இந்த உலக மானது நீளம், அகலம், உயரம் என்ற மூன்று அளவுகளை மட்டும் கொண்டதன்று: காலம் என்ற நான்காவது அளவையுங் கொண்டது" என்று. காலவேகத்திற்குத் தக்கவாறு அளவையும் மாறுபடுகின்றது என்பது அவர்கள் கொள்கை. இந்த விதமாக ஒருவருக்கும் புரியாத வகையில் பேசிக் கொண்டிருக்கும் ஐன்ஸ்டைன் என் பாரை ஒரு சமயம் யாரோ இதைக் கொஞ்சம் விளங்கும் படியாகச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டாராம். உடனே அவர், "நீர் உமது காதலியின் வரவு நோக்கிக் காத்திருக்கிறீர் என்று வைத்துக் கொள்ளுவோம். அப் பொழுது உமக்கு ஒரு நொடிப் பொழுது கழிவது ஒரு மணிபோலக் காண்கிறது. பிறகு காதலி வந்து விடுகிறாள். அப்பொழுது ஒரு மணி ஒரு நொடிப்பொழுதுபோல் கழித்து விடுகிறது. இதுதான் நான் சொல்லும் கால தத்துவம்' என்றாராம்.

உலகம் காலமென்ற நான்காவது பரிமாணத்தையும் கொண்டிருந்தால் மற்றப் பரிமாணங்களாகிய நீளத் திலும், அகலத்திலும், உயரத்திலும் செல்ல முடிவது போல அதிலும் விருப்பம் போலச் செல்ல முடியுமா என்ற வினா எழுகின்றது. எடுத்துக்காட்டாக இந்தப் பேரழிவு செய்த உலகப்போர் தொடங்குவதற்கு முன்னால் அழகாக இருந்த ஐரோப்பாவுக்கு இப்பொழுது போக முடியுமா? இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இருக்கப் போகும் உலகத்தை இன்றே பார்த்துவிட முடியுமா? இந்த வினாக்களுக்கும் விடை கிடைக்கிறதில்லை. எச். ஜி. வெல்ஸ் என்ற பெரியார் கால யந்திரம் என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அதில் வேண்டுமானால் ஒரு விஞ்ஞான அறிஞர் இறந்த காலத்திலும், எதிர் காலத்