பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

பூவின் சிரிப்பு


 தாய்க்கு இயல்பாகவே குழந்தையை வளர்ப்பதற்கு வேண்டிய பல உண்மைகள் தெரிகின்றன. ஆனால் அவற்றோடு அவள் மனநிறைவு பெற்று விடக்கூடாது. ஆராய்ச்சியாளர்கள் இதுவரையில் கண்ட உண்மைகளையும் அவள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தந்தையும் இதில் ஒருமனதாக ஒத்துழைக்க வேண்டும்.

குழந்தையிடம் பெற்றோர்களுக்கு நிறைந்த அன்பு இருப்பது இயல்பு. அதனால் குழந்தையை வளர்க்க அவர்கள் பல திட்டங்கள் வகுக்கிறார்கள். ஆனால் திட்டங்களை விட அவர்கள் வாழ்க்கை நடத்தும் விதமே மிக முக்கியமானது. அவர்கள் நடத்தையே திட்டங்களைவிட மிகுதியாகக் குழந்தையின் உள்ளத்தில் பதிகிறது.

மேலும் குழந்தையின் சூழ்நிலை அதன் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கவேண்டும். பெற்றோரின் நடத்தையுடன் சூழ்நிலையும் சேர்ந்து குழந்தையின் இள உள்ளத்தில் பெரிதும் ஆழ்ந்து பதிந்து பல உணர்ச்சிகளை உண்டாக்குகின்றன. அவற்றின் பயனாகப் பல தன்மைகள் அமைகின்றன. "சுற்றுப்புறம் எவ்வாறு காசநோயை உண்டாக்கக் காரணமாக இருக்கிறதோ அதுபோலச் சூழ்நிலை மன அமைப்புக்குக் காரணமாகிறது" என்று டாக்டர் சில்வர்மன் (Dr. Silverman) சொல்கிறார்.

ஆகையால் குழந்தைப் பருவம் மறந்து போவதானாலும் அதன் அநுபவமே வாழ்க்கையின் போக்கை நிறுவுவதால் அது மிக முக்கியமான இடம் பெறுகிறது. அதை உணர்ந்து குழந்தைகளை வளர்க்கவேண்டும். வருங்கால உலகத்தை அமைக்கும் மக்களின் வெற்றியும் தோல்வியும் இன்று குழுந்தைகளை வளர்க்கும் நம் கையிலேயே இருக்கின்றன.