பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

பூவின் சிரிப்பு



எப்பொழுதுமே மழையில் முழுகியிருந்த உலகம் உச்சி வேளைக்குப் பிறகு சூரியனின் பொற்கதிர்களை நன்கு துய்த்துக் கொண்டிருந்தது.

அந்தி வேளைக்கு முன்பே இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்கப் புறப்பட்ட நான் நடந்து கொண்டே இருந்தேன். செங்கதிர்ச் செல்வன் மெல்ல மெல்லக் கீழிறங்கி மேற்கு மலைத் தொடருக்குப் பின்னே மறையலானான். மேல்வானில் எங்கோ மெல்லிதாக மஞ்சு படர்ந்திருந்தது. ஆகா! அதற்குள்ளே புகுந்து பொற்கதிர்கள் செய்கின்ற வண்ணக்களியாட்ட நடனங்களை என்னென்பது கிளிப்பச்சை, தாமிரச் சிவப்பு, பசு மஞ்சள். அடடா கீழ் வானத்திலோ செம்பஞ்சை வில்லிட்டுத் தட்டிப் பட்டை செய்வதற்குக் குவித்து வைத்ததுபோலச் செந்நிற மேகங்கள். அவற்றின் செம்மை தரையிலும் பிரதிபலித்து எங்கும் ஒரு மோகனக் காட்சியை உண்டு பண்ணிற்று.

மறுபடியும் மேல்புறம் திரும்பினேன். அங்கே வான வெளியில் பதிந்திருந்த பளிங்குப்பாறையை இப்பொழுது காணோம். அதற்குப் பதிலாகச் செஞ்சோதிக் குதிரை ஒன்று பின்னங்கால்கள் இரண்டையும் ஊன்றி எட்டித் தாண்டுவது போல ஒரு மேகம் காணப்படுகிறது.

காணப்படுகிறதென்றா சொன்னேன்? இப்பொழுது அதையும் காணோம், வேறு ஏதோ ஓர் உருவம்: விநாடிக்கு விநாடி, நொடிக்கு நொடி புதிய தோற்றங்கள்: புதிய அழகுகள்: புதிய காட்சிகள்.

இருள் மெதுவாகக் கீழ்த் தொடுவானத்திலிருந்து மேலே பரவுகிறது; ஒளி கொஞ்சங் கொஞ்சமாகப் பின் வாங்குகிறது. அந்த இருள்-ஒளிப் போராட்டத்தைக்