உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 109

கண்ணிரை விலக்கிக்கொண்டான் சிங்காரம் செல்லம்மாவின் கழுத்தைவிட்டுச் சரட்டை அகற்ற அவன் பஞ்சை மனம் சம்மதிக்கவில்லை. காரணம், அச்சரடு மரணப்படுக்கையில் உழன்ற அவன் மனைவி தன் ஞாபகார்த்தமாக என்றும் இருக்கவேண்டுமென்று மகளுக்குப் பூட்டியே ஆபரணம் அது. ஆனால் மேஸ்திரிக்கு இதில் ஏதோ சூது இருப்பதாகத் தோன்றவே கோபம் கொந்தளித்தது.

"அயோக்கியன்! இன்று பொழுதுக்குள் கடன் பட்டு வாடா ஆகிப்போடனும் இல்லாவிட்டால் நாளை விடிவதற்குள் உன் குடிசை பறிபோயிடும் ஜாக்கிரதை'

தகப்பனுக்கும் மே ஸ்திரிக்கும் நடந்த சம்பாஷணை பூராவையும் ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண்டிருந்த செல்லம்மாவுக்கு அழுகை பீறிட்டது.

"அப்பா, எதுக்காக இம்பிட்டு யோசனை பண்றீங்க? மூச்சு விடாமே என் சரட்டை அந்த ஐயாகிட்டக் கொடுத்துக் கடனை அடைச்சுப்பிடுங்க. பெரிய மனுசங்க பொல்லாப்பு நமக்கு ஏன்? நமக்கும் ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் நல்ல காலம் பிறக்காமலா போயிரும்? அப்போ வேறே ஒரு சரடு செஞ்சுக்கலாம்..." என்பதாக விக்கலுக்கும் விம்மலுக்கும் மத்தியில் கூறினாள் செல்லம்மா.

தன் புதல்வியின் அறிவைக் காணச் சிங்காரத்துக்கும் அழவேண்டும்போலிருந்தது. ஆகட்டும் கண்ணு' என்று சொல்லிச் சரட்டைக் கழற்ற நெருங்கினான் அவன். வேறு வழி?

அதே சமயம், "மேஸ்திரி எசமான்! உங்க மகள் கமலாவைப் பாம்பு கடிச்சு ரொம்பத் தடயுடலா இருக்குங்க!" என்று ஓடிவந்து சொன்னான் வேலைக்காரப் பையன்.

அவ்வளவுதான் மேஸ்திரிக்கு உலகமே சுற்றியது: கை கால்கள் நடுங்கின. தன் குழந்தை ஆசை காட்டி அழகு காட்டி மனத்தை மகிழச் செய்த நிகழ்ச்சிகள் அடுக்கடுக்காக மனத்திரையில் விரிந்தோடின. மகளின் வதனத்தில் ஆசை கொண்ட மட்டும் பதித்த அன்பு முத்தங்களை ஒவ்வொன்றாக நினைவுபடுத்திப் பார்த்தார். ஒரு நிமிஷம் பயங்கர நினைவுகள் அவரை வாட்டி எடுத்தன. -