58
பூவையின் சிறுகதைகள்
"நீங்க எதொண்ணுக்கும் பயப்படாதீங்கப்பா... எனக்குத் தெரியாம என்னை எவனும் சிறை எடுத்துக்கிட்டுப் போயிட முடியாதுங்க அப்பா" என்று சிரித்தாள் பவளம்:
வட்டிற் சோற்றைத் தட்டி விட்டு எழுந்தான் வீரமணி.
வேலுத் தேவர் திடுக்கிட்டார்.
அவருடைய தர்மடத்தினி சீரங்கம் துவண்டாள்; "தம்பி, கெட்ட சொப்பனம் கண்டதொப்ப அந்த இடுசாமச் சங்கதியை மறந்துப்பிடுறத்தை விட்டுப்புட்டு, வட்டிச் சோற்றைத் தட்டி விட்டுட்டியேப்பா? என்றாள்.
கண்ணிர் மல்க அன்னையை ஏறிட்டு நோக்கினான் வீரமணி, "ஆயி, நான் என்னோட அம்மான் மகள் பவளத்தை நினைச்சு இப்போ கிலேசம் காட்டலே. உங்க கூடப் பொறந்த பொறப்பு நம்மளுக்குச் செஞ்சு காட்டியிருக்கிற அவமரியாதையை நினைச்சுத்தான் சங்கடப்படுறேன். ஊர் வளமைப் பிரகாரம் நம்ம வீட்டுக்கு மாத்திரம் ஊர் வெற்றிலை பாக்கும், கண்ணாலப் பத்திரிகையும் வைக்காமல் பண்ணிப்பிட்டாரே எங்க அம்மான்காரர்? இதை நினைச்சால்தான் நெஞ்சு ஆறவேமாட்டேங்குது" என்றான் இளவட்டம்.
"தம்பி, கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கணும்னு நம்ப ஊர் நாட்டிலே சொல்லிக்கிடுவாங்க. உன் அம்மானை, சிங்கப்பூர்ப் பணம் கண்ணை மறைச்சிடுச்சு எங்கிட்டே புதுப்பணம் நடமாடாடடியும், பழைய பணத்துக்கு குறைச்சல் இல்லேயே? நம்ப மச்சு வீட்டு மனாத்தைக் கட்டிக் காப்பாற்றி விட்ட தங்கமப்பா நீ... உனக்குப் பொண்ணுக்கா பஞ்சம்? இந்தத் தையிலேயே நம்ம வீட்டிலேயும் கொட்டு மேளம் கொட்ட வச்சுப்புடுறேண்டா, மகனே" வீறுபூண்டு பேசினார் வேலு.
வீரமணி சிரித்தான்.
"தம்பி, சாப்பிட்டுப்புட்டுப் படுத்துக்க விடிஞ்சதும், நீ சிலட்டுர் ரேக்ளாப் பந்தயத்தைப் பார்க்கிறதுக்குப் பறிஞ்சிடு. நாளைக்குக் காலம்பற நீ இங்கிட்டு இருந்தா உம் மனசு உன்னையும் தாண்டி மீறிக்கிட்டு ஏங்கித் தவிச்சுக்கிட்டிருக்கும்!"