உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. "திராவிடர்” என்றார் ஏன்? மானுடப்பற்றுக் கொண்ட உலகத்தின் ஒப்பற்ற சுய சிந்தனையாளரான தந்தை பெரியார் அவர்கள் - தனக்கெனத் தனிப்பற்றுக் கொள்ளாதவர் - பின் ஏன் திராவிடர் இனம், தமிழர்கள், தமிழ்நாடு, தமிழர்தம் மொழி, பண்பாடு என்பதைப்பற்றிப் பேசுகிறார்? "இது ஒரு சுய முரண்பாடு அல்லவா?" என்ற கேள்வி சிலருக்குள் எழலாம். உலகத்திற்கே பயன்படும் ஒரு மருந்தினைக் கண்ட விஞ்ஞானிகள்கூட அதனை அவரவர் வீட்டிலே, நாட்டிலே, அவரவர் ஆய்வுக் கூடத்தில்தானே ஆய்வு செய்து பார்க்கிறார்! புத்தர் தனது கொள்கைகளை, ஒரு வாழ்க்கை முறையாக ஆக்கியவர். பார்ப்பனீய வர்ணாசிரம முறை, சமஸ்கிருதப் பண்பாட்டு எதிர்ப்பு பெண்ணடிமை எதிர்ப்பு, மனிதநேயம் ஆகிய அவரது மக்களின் (வெகுஜன மொழி) பாலி மொழியில் தானே அந்த மக்களுக்கு சொல்லத் தொடங்கி, இன்று உலக முழுவதும் பரவியுள்ளது? அதுபோல எதற்கும் ஒரு தொடக்கம் அந்தந்தப் பகுதியில்தான் என்பது உள்ள நடைமுறைதானே! இந்தியாவில் உள்ள பல மொழித்தடைகளாலும், இந்தியா முழுவதும் அன்றுமுதல் இன்றுவரை படித்தவர்கள் மேல் சாதியினராக ஆதிக்கம் செலுத்துபவர்கள் அதிகார வர்க்கத்தினராகியதாலும், விளம்பரம், தகவல் தொடர்பு சாதனங்கள் அந்த உயர் சாதியினரிடம் உள்ளதாலும் அந்த இரும்புத்திரைகளைக் கடந்து பற்பல இடங்களிலும் ஒத்த கருத்துள்ளவரிடையேகூட பரவ வாய்ப்பு முன்பு குறைவாகவே இருந்தது!