உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

டம் அவ்விதம் நடந்துகொண்டதில்லை. எப்போதும் ஒரு கனிவு, எனக்கென்று தனியாக வைத்திருப்பார். என்னைத் தனது குடும்பத்தில் பிறவாப் 'பிள்ளை' எனக் கொண்டிருந்தார்.

தமிழன் வரலாற்றில் முக்கிய கட்டம்

நான் கண்டதும் கொண்டதும் அந்த ஒரே தலைவரைத்தான்.

இப்போது நான் உள்ள வயதில் அவர் இருந்தார்—நான் அவருடன் இணைந்தபோது; முப்பது ஆண்டுகளுக்கு முன்பு.

அதற்குமுன் முப்பது ஆண்டுகள் அவர் பணியாற்றி வந்திருக்கிறார்.

இந்த 'ஆண்டுகள்' தமிழரின் வரலாற்றிலே மிக முக்கியமான ஆண்டுகள். 'திடுக்கிட வைக்கிறாரே!திகைப்பாக இருக்கிறதே! எரிச்சலூட்டுகிறாரே! ஏதேதோ சொல்கிறாரே!' என்று கூறியும், 'விட்டுவைக்கக்கூடாது! ஒழித்துக்கட்டியாக வேண்டும் ! நானே தீர்த்துக்கட்டுகிறேன்!' என்று மிரட்டியும் தமிழகத்துள்ளாரில் பலர் பேசினர்; ஏசினர்; பகைத்தனர்; எதிர்த்தனர்; ஏளனம் செய்தனர்; மறுப்பு உரைத்தனர். ஆனால், அவர் பேச்சைக் கேட்ட வண்ணம் இருந்தனர் மூலையில் நின்றாகிலும்; மறைந்திருந்தாகிலும்! அந்தப் பேச்சு அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்தபடி இருந்தது. எதிர்த்தவர்கள், ஏளனம் புரிந்தவர்கள், ஏனோதானோ என்று இருந்தவர்கள் தத்தமது நிலை தன்னாலே மாறிடக்கண்டனர்; கொதித்தவர்கள் அடங்கினர்; மிரட்டினோர் பணிந்தனர்; அலட்சியம் செய்தோர் அக்கறை காட்டினர்; அவருடைய பேச்சோ! அது தங்குதடையின்றி வேகம் குறையாமல் பாய்ந்தோடி வந்தது. மலைகளைத் துளைத்துக்கொண்டு, கற்களை உருட்டிக்கொண்டு, காடுகளைக் கழனிவளம் பெறச் செய்துகொண்டு ஓசை நயத்துடன், ஒய்யார நடையுடன்! அங்கே பேசுகிறார். இங்கே பேசுகிறார்,