உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


நேரத்தில், அவர் நமக்கு இதுவரையில் ஆற்றியிருக்கிற தொண்டுக்கு—அவர்களால் தமிழகம் பெற்றிருக்கிற நல்ல வளர்ச்சிக்கு—பெயருக்கு அவர்களுக்கு நாம் நம்முடைய மரியாதையை—அன்பை—இதயத்தைக் காணிக்கையாக்குவதற்கே இங்கே கூடியிருக்கிறோம். பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளும் நேரத்தில் இங்கே நடந்த ஊர்வலமும், அதன் சிறப்பும் பெரியார் அவர்களுக்கு நம்முடைய வணக்கத்தைத் தெரிவிப்பதற்காகத்தான் என்று எண்ணுவது நமது கடமையாகும்.

புதிய வரலாறு படைத்தவர் பெரியார்

தமிழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும், இன்னும் உலகத்திற்கே கூட என்றும் சொல்லலாம்; அவர்கள் செய்திருக்கிற அரிய பெரிய காரியங்கள், ஆற்றியிருக்கிற அருந்தொண்டுகள், ஏற்படுத்தியிருக்கிற புரட்சிகர உணர்ச்சிகள், ஓடவிட்டிருக்கிற அறிவுப்புனல் தமிழகம் என்றுமே கண்டதில்லை . இதற்குப் பிறகும் இப்படிப்பட்ட மாபெரும் புரட்சி வேகத்தை நாம் காணப்போவதில்லை---வரலாற்றில் பொறிக்கத்தக்க புதிய வரலாறு என்று கருதும் நிலைமையை அவர்கள் தன்னுடைய பொதுத் தொண்டின் மூலம் நமக்கு அளித்திருக்கிறார்கள்.

சு.ம. ஆரம்ப காலத்தை நோக்கி என் நினைவுகள்

பிறந்தநாள் கொண்டாடுகிற நேரத்தில் என்னுடைய நினைவுகள், திராவிடர் கழகமாகவும், அதற்கு முன்னால் தமிழர் இயக்கமாகவும், சுயமரியாதை இயக்கமாகவும் இருந்த நேரங்களில். அவர்களோடு இருந்து பணியாற்றிய பல எண்ண அலைகளை நெஞ்சில் ஓட விட்டுக்கொண்டிருக்கின்றன. எத்தனை இரவுகள், எத்தனை பகல்கள், எத்தனை காடுமேடுகள் எத்தனை சிற்றாறுகள், எத்தனை பேராறுகள், எத்தனை மாநாடுகள் என்று எண்ணிப்பார்க்கிற நேரத்தில், ஒரு போர் வீரன் களத்தில் புகுந்து, 'இந்தப் படையை முறியடித்தேன், அந்தப் படையை வென்றேன்' என்று காட்டி மேலும் மேலும் செல்வதைப் போல அவர்கள் வாழ்நாள்