23
30 ஆண்டுகளுக்கு
முன்பும் இன்றும்.........
30 ஆண்டுகளுக்கு முன்னாலே தமிழகத்தில் பேசுவதற்குக் கூச்சப்பட்டுக்கொண்டிருந்த விஷயங்களை இன்று நமது எட்டு வயதுச் சிறுவன் வெகு தாராளமாகப் பேசுகிறான். 20 ஆண்டுகளுக்கு முன்னாலே நம்முடைய மனத்தில் பயந்துகொண்டிருந்த தத்துவங்கள், இன்றைய தினம் கேலிக்குரியதாகுமென்று நாடே சொல்கிறது. இரண்டு நூற்றாண்டுகள் பாடுபட்டு உண்டாக்க வேண்டிய அறிவுப்புரட்சியை இருபது ஆண்டுகளில் அவர்கள் சாதித்துக் கொடுத்ததால் நமக்கெல்லாம் எளிதாக இருக்கிறது; எல்லாம் சுலபமாக இருக்கிறது.
ஆனால், இது எளிதாகும். அளவுக்கு அவர்கள் பட்ட கஷ்டங்கள் எத்தனையோ, நன்றாக நினைவுக்கு வருகிறது. நானும் அவரும் ஒருமுறை சிவகங்கை மாநாட்டுக்குப் போன நேரத்தில், அந்த ஊர் முழுதும் பழைய செருப்புக்களை அங்கே தோரணமாகக் கட்டித் தொங்கவிட்டார்கள். இன்று நடந்த ஊர்வலத்தில் மாலை போட்டார்கள்; கம்பீரமாகச் செல்கிறோம்; ஆங்காங்கே கொடிகளும் அசைந்து வாழ்க! வாழ்க! வென்று வாழ்த்துகின்றன. ஆனால், அப்போது சிவகங்கையிலே தொங்கியது தோரணங்கள் அல்ல; அறுந்துபோன பழைய செருப்புக்கள். அப்படி அறுந்துபோன செருப்புக்களை எடுத்துத் தோரணமாகக்கட்டியவர்களின் பிள்ளைகளிலே சிலர் இந்த மண்டபத்திற்கு வந்திருக்கலாம் என்று கருதுகிறேன்; அப்படிப்பட்ட மாறுதல் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. அவரை முதலிலே புரிந்துகொள்ள மறுத்தார்கள்; புரிந்துகொள்ள மறுத்தவர்கள் பிறகு புரிந்து ஏற்றுக்கொண்டனர்; ஏற்றுக்கொண்டவர்களும் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் அப்போதிருந்தார்கள். இப்போது அவர் பேசுவது எல்லோருக்கும் புரிந்துவிட்டது; பெரும்பாலோருக்கு அது பிடித்துவிட்டது; அதில் மிகப்பெரும்பாலோர். அவற்றைத் தங்களுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாகக் கொண்டிருக்கிறார்கள்.