உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பெரியபுராண ஆராய்ச்சி 1. இராஜராஜ விஜயம் இந்நூல் திருப்பூந்துருத்திக் கோவிலில் படிக்கப்பெற்றது இதனைப் படித்தவனுக்கு ஊதியம் அளிக்கப்பட்டது" அதனில் இராசராசன் வெற்றிகள் குறிக்கப்பட்டிருப்பினும், அவனது சமயத் திருப்பணிகளும் குறிக்கப்பட்டிருக்கலாம் எனக் கோடல் தவறாகாது. இராசராசன் நம்பியைக் கொண்டு திருமுறைகள் தொகுத்தமை தக்க இடம் பெற்றிருக்கும் எனக் கோடல் பொருந்தும், 2. இராஜராஜேசுவர நாடகம் இஃது இராசராசன் பெரிய கோவில் கட்டிய முறையையம் அவன் அதற்குச் செய்த அறங்களின் விரிவையும் பிறர் அதற்குச் செய்த திருப்பணிகளையும் பல காட்சிகளாக விளக்கும் நூலாக இருத்தல் வேண்டும்." தஞ்சை இராஜராஜேசுவரத்தில், சென்ற பகுதியிற் சொன்னவாறு அப்பர். சம்பந்தர், சுந்தரர், சிறுத்தொண்டர், சண்டீசர், மெய்ப்பொருள் நாயனார் செப்புப் படிமங்கள் வைத்துப் பூசிக்கப்பட்டன அல்லவா? ஆதலின், இந்நாடக நூலில், அப்படிமங்களைப் பற்றிய குறிப்புக்கள் வரும் இடத்தில் அந்நாயன்மார் வாழ்க்கைக் குறிப்புக்கள் விளக்கமாகவோ சுருக்கமாகவோ குறிக்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்று நினைத்தல் பொருத்தமாகும். அஃதாயின். அக்குறிப்புக்கள் சேக்கிழார்க்குப் பயன் பட்டிருக்கலாம். 3. கன்னிவன புராணம், பூம்புலியூர் நாடகம் இவை முதற் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி.1070- 1120) செய்யப்பட்டவை. இவற்றின் ஆசிரியர் பரசமய கோளரி மாமுனி என்பவர்." இவர் பாதிரிப் புலியூரினர். இவை இரண்டும் பாதிரிப் புலியூரைப்பற்றி புராணமும் நாடகமுமாம். நாம் அறிந்த வரையில் அவ்வூரில் அப்பர் சமணராக இருந்த காலத்தில் புகழ்பெற்ற சமணப் பள்ளிகளும் பாழிகளும் இருந்தன." அப்பர் அங்குத் தரும சேனர் என்ற பட்டத்துடன் சமணத் தொண்டு செய்து வந்தார். பிறகு அவர் சூலை நோய் கொண்டும் சமணருடன் மாறுபட்டும் திருவதிகை சென்று சைவரானார் ; அதனால் மகேந்திரவர்மனுடைய தண்டனைகளைத் தாங்கினார்; இறுதியில் கடலில் கல்லைப் புணையாகக்கொண்டு திருப்பாதிரிப் புலியூர்க்கு அருகில் கரை ஏறினார்;" உடனே பாதிரிப்புலியூர்ச் சிவன் கோவிலை அடைந்து 'ஈன்றாளுமாய் என்று தொடங்கும் பதிகம் பாடினார். மகேந்திரன் அப்பரது பெருமை உணர்ந்து சமணத்தை விட்டுச் சைவனானான்; பாதிரிப் புலியூரில் இருந்த பள்ளிகளையும் பாழிகளையும் தகர்த்து அச்சிதைவுகளைக் கொண்டு திருவதிகையிற் குணபர ஈசுவரம் கட்டினான். இவ்வரலாறு முழுவதும் பூம்புலி யூரைப் பற்றியதே ஆதலின், இது பல காட்சிகளாகப் பிரிக்கப்பட்டுக் கன்னிவன புராணத்தும் பூம்புலியூர் நாடகத்தும் இடம் பெற்றிருக்கலாம் என நினைப்பது பொருந்தும்.