பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

அவர்கள் தன்னை ஒரு மனிதனாக மட்டுமே உலகத்துக்குக் காட்டி, ஒரே இறைவனாகிய அல்லாஹ்வையே வணங்க வேண்டுமென உலக மக்களுக்கு அறிவுறுத்தி, அந்த உணர்வு உலகம் உள்ளளவுக்கும் மக்களிடையே அழுத்தமாக நிலைபெற வழி வகுத்துச்சென்றுள்ளார்கள். அதனால்தான் இஸ்லாம் அன்று முதல் இன்றுவரை எவ்வித மாற்றங்களுக்கும் இடம்தராமல் உலகெங்கும் அழுத்தமாகக் காலூன்றி வளர்ந்து வருகிறது.

வாழ்வின் அனைத்துத் துறைகளிலும்
அழகிய முன்மாதிரி

மற்ற நபிமார்களுக்கும் பெருமானாருக்கும் மற்றொரு வேறுபாடு உண்டு. முந்தைய நபிமார்களில் யாருமே வாழ்க்கையின் எல்லாப் படித்தரங்களிலும் முன் மாதிரியாக வாழ்ந்து மக்களுக்கு வழிகாட்டிச் சென்றவர்கள் அல்லர். அவர்கள் மக்களுக்கு உபதேசம் மட்டுமே செய்து வாழ்ந்து மறைந்தவர்கள். நாயகத்துக்கு முன் வாழ்ந்து மறைந்த மூஸா (அலை), ஈஸா (அலை) போன்ற தீர்க்கதரிசிகள் ஒரு நல்ல குடும்பத் தலைவராக, நல்ல கணவராக, தந்தையாக, படை நடத்தும் தளபதியாக, சட்டமியற்றுவோராக, ஆட்சித் தலைவராக, வாழ்ந்து வழிகாட்டியவர்கள் அல்லர். ஆனால், அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மனித வாழ்வில் எத்தனை வாழ்வியல் முறைகள், படித்தரங்கள், அம்சங்கள் உண்டோ அத்தனையிலும் வாழ்ந்த அனுபவ முத்திரை பதித்து வருங்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளி விளக்குகளாக அவற்றை ஆக்கித் தந்து மறைந்தவர்.

எனவே, வல்ல அல்லாஹ் தன் திருமறையில் “உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரில் அழகான முன்மாதிரி அமைந்திருக்கிறது” (33:21) என நாயகத் திருமேனியைப் பற்றிக் கூறியுள்ளார். இதற்கொப்ப அண்ணலார் இறைச்