பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

யும் ஒன்று திரட்டி, அவர்களின் ஒருமித்த ஒப்பதலோடு புதியதோர் சமயச்சூழலை மதினாவில் அமைத்தார் என்றும், நபிகளால்தான் சமுதாய, அரசியல் வாழ்வுக்காக எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் முதன்முதலாக உருவாக்கப்பட்டது என்பதையும் ஆசிரியர் மிகத் தெளிவாக ஆதாரபூர்வமாக விவரித்து உள்ளார். இஸ்லாத்தின் இந்தச் சட்டங்கள் பல்வேறு கருத்துடைய சமயத்தவர்களாயினும் அவர்களும் ஏற்றுக் கொண்டு இவ்வுலகில் சமாதானத்தின் அடிப்படையில் சகோதர, சமத்துவ சமுதாய வாழ்வை நிலைநிறுத்த முடியும் என்பதைக் காண்பிக்கின்றன.

நிற்க, பெருமானாரின் அனைத்து மதங்களையும் மதிக்கும் மனப்பான்மை, அவரது போதனைகள் இக் காலத்திற்கும் எக்காலத்திற்கும் ஏற்புடைய இன்றியமை யாதவை என்பதனை மிகத் திண்ணிய முறையில் விளக்கிக் காட்டுகின்றார் ஆசிரியர்.

எம்மதமும் சம்மதமென்று செப்பிடுவர் சிலர். ஆனாலோ பிற மதங்களை அழித்திட வேலாயுதம், சூலாயுதம், கடப்பாரை, சம்மட்டிகள் கையிலேந்திப் புறப்பட்டுவிடுவர் இவர்கள்.

முகமது நபி (சல்) அவர்களோ எம்மதமும் சம்மதம் என்று கூறிடவில்லை. ஆனால், இஸ்லாம் எந்தச் சமயத்திற்கும் எதிரி அல்ல என்று கூறினார். அப்படிக் கூறுவதன் மூலம் நிலைத்து நிற்கும் இஸ்லாத்தின் சகிப்புத்தன்மையை வெளிக் கொண்டுவருகின்றார்; பறைசாற்றுகின்றார் சகோதரர் மணவை முஸ்தபா.

பெருமானாரின் இறைப்பணி மற்றும் உயரிய பண்புகள் பற்றி ஆசிரியர் அற்புதமாக விளக்குகிறார்.

யூத மத நம்பிக்கையின்படி மேசியா என்னும் கிறிஸ்து உலகில் தோன்றுவார் என்று தீர்க்கர்கள் தீர்க்கமாகக்

2