பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

என்று என்னுடைய நண்பர் ஒருவர் சொல்வதுண்டு. அவர் அவ்விதம் சொல்லும்போதெல்லாம் நான் அதை மறுத்து இங்கு மத வாதம் தலைதூக்காமல் இருக்க வேண்டு மானால் மதங்களின் கோட்பாடுகளை, சித்தாந்தங்களை, அவை சிபாரிசு செய்யும் சடங்குகளுக்கு பின்னால் இருந்து வரும் தத்துவங்களை நன்கு அறிந்த அறிவுஜீவிகள் தத்தம் மதங்களைப் பற்றித் தெளிவாகவும், விரிவாகவும் எழுத வேண்டும், பேச வேண்டும், பகிரங்கமாக விவாதிக்க வேண்டும், மற்ற மதத்தவரிடம் உரையாடல்கள் நடத்த வேண்டும் என்று சொல்வதுண்டு.

மேலோட்டமாக பார்க்கும்போது இந்தக் கருத்து சர்ச்சைக்குரியதாக, முரண்பாடு கொண்டதாகத் தோற்றமளிக்கக்கூடும். ஆனால் உண்மை என்னவெனில் பெரும்பாலான மக்கள் தத்தம் மதங்களைப் பற்றி முழுமையாக அறிந்திராதவர்கள். ஆங்காங்கே கூட்டங்களில் கேட்டதையும், அரைகுறையாக விவாதங்களில் எடுத்துரைக்கப் பட்டதுமான கருத்துகளையே தங்கள் மதத்தின் கோட்பாடுகளாக அவர்கள் அறிவார்கள். சமயப் புத்தகங்களை ஆழ்ந்து படிக்கவோ, நுணுகி ஆராயவோ பெரும்பாலானோருக்குச் சமயமில்லை. இந்துக்களாகவும், இஸ்லாமியர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், வேறுபல சமயத்தினராகவும் தாங்கள் பிறக்க நேர்ந்ததின் காரண மாகவே அவர்கள் தத்தம் மதங்களைக் குறித்து பெருமைப்படுகிறார்களேயன்றி, அவற்றை ஆழ்ந்து படித்ததன் காரணமாக அன்று.

இந்த அசட்டுப் பெருமையையும், அரைகுறை ஞானத்தையும், மதவாதிகள் தங்கள் சுயலாபத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதற்கு நிரந்தரமான தீர்வு அறிவைப் பரப்புவதேயன்றி அதை ஒளித்துவைப்பதோ, மறுப்பதோ அல்ல. நண்பர் மணவை முஸ்தபா இத்தகையதொரு முயற்சியைத்தான் இந்தப் புத்தகத்தின் மூலம் மேற்