பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

அணிமணிகளை ஆடைகளை முற்றாக விலக்கித் தியாகம் செய்கிறார். எந்நேரமும் பொருள் வேட்கையும் இன்ப உணர்வும் மிக்கவராக வாழ்ந்தவர் ஹஜ்ஜின்போது இறைச்சிந்தனை தவிர்த்து வேறு எந்தச் சிந்தனையும் இல்லாத மனத்திலிருந்து விலக்கிய தியாகச் சீலர் ஆகிறார்.

உலகெங்கிலுமிருந்து வந்து குழுமும் பல்வேறு நாடு, மொழி, இன, நிற, கலாச்சார சார்புடையவர்கள் அனைவருமே தங்கள் நாட்டுப்பற்றை, மொழிப்பற்றை, இனப்பற்றை பெருமையை, கலாச்சார பெருமிதத்தை துறந்தவர்களாக ஒரே இறைச் சிந்தனையுடன், அனைவரும் மனிதர்கள், ஆதாம் (அலை) பெற்ற மக்கள், சகோதரர்கள் என்ற உணர்வுடையவர்களாகத் திகழ்கிறார்கள். ஆண்டான், அடிமை, உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற எண்ணங்கள் இருந்தவிடம் தெரியாமல் மறைந்தொழிகின்றன.

வாழ்வின் ரகசியத்தை
வெளிப்படுத்தும் அரஃபாத்

ஹஜ்ஜின் முத்தாய்ப்பாக அரஃபாத் பெருவெளியில் ஹாஜிகள் அனைவரும் இஹ்ராம் பெருமையுடன் பகல் முழுமையும் தங்குவர். அனைத்தையும் விட்டு விடும் தியாகச் சின்னமான இந்த உடையே இறந்தவரின் மையத்தின் மீதும் போர்த்தப்படுகிறது. தனக்கென உள்ள அனைத்தையும் இறைவன் பொருட்டுத் தியாகம் செய்யும் தன் உள்ளுணர்வின் வெளிப்பாடே இவ்வுடை. தற்காலிகமாக அமைக்கப்பட்ட இக்கூடாரங்கள் அன்று மாலையே கலைக்கப்படுகிறது. இதன் மூலம் தங்கள் உயிரும் தற் காலிகமான இவ்வுடலிலிருந்து எந்நேரமும் பிரிக்கப்பட்டு விடும் என்பதை இஃது நினைவூட்டுவதாக அமைகிறது.

ஹஜ்ஜின் இறுதி நிகழ்வாக ‘குர்பான்’ கொடுக்கப்படுகிறது. இறைவன் பொருட்டுத் தன் மகனைப் பலியிடத்