பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

விடுகிறது. இதற்கான மனப்பயிற்சியை நோன்பு அழுத்தமாக வழங்குகிறது.

புலனடக்கத் தோற்றுவாய் நோன்பு

மனிதனைத் தவறான போக்கில், தீயவழிகளில் இட்டுச் செல்வதில் ஐம்புலன்கட்கு அதிகப் பங்குண்டு. ஐம்புலன்களை அடக்கி ஆள்வது என்பது அவ்வளவு எளிதான செயலன்று, இதனால்தான் அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி ஆள்பவன் அறிவுக்கு வித்துப் போன்றவன் என மொழிந்தார் வள்ளுவப்பெருந்தகை.

அத்தகைய புலனடக்கத்தைத் தோற்றுவிக்கும் தோற்றுவாயாக நோன்பு அமைந்துள்ளது.

பகல் முழுதும் எதையுமே உண்ணாமலும் பருகாமலும் புகைக்காமலும், வெற்றிலை, பாக்கு, புகையிலை போன்ற வற்றை மெல்லாதிருப்பதோடு, பொய்யுரைத்தல், புறம் பேசுதல், தீயன மொழிதலாகிய தீச்செயல்கள் அனைத்தும் முற்றாகத் தவிர்க்கப்படுவதால் வாய்ப்புலன் வெற்றி கொள்ளப்படுகிறது.

நோன்பின்போது எத்தகைய அறுசுவை உணவின் நறுமணமாயினும் அதனை நுகரும் வேட்கை நோன்பாளிக்கு இல்லாதுபோகிறது. மூக்குப் பொடி போன்றவற்றை மூக்கினுள் திணித்து மூக்கு துவாரத்தையே நாசப் படுத்தும் தவறான பழக்கம் நோன்பின்போது முற்றாக விலக்கப்படுவதால் மூக்குப் புலனும் ஆட்கொள்ளப்படுகிறது.

நோன்புக் காலத்தில் தீயன காண்பது கடுமையாகத் தடுக்கப்படுகிறது. தன் பார்வையில் அன்பும் பரிவும் கருணையுமே இருக்குமாறு நோன்பாளி பார்த்துக் கொள்கிறான். ஈத்துவக்கும் மாதமாதலால் அனைவரிடமும்