பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

என்ற வேறுபாடுகளின் சுவடுகூட இல்லாதபடி இறைவன் முன்னிலையில் எல்லோரும் சமம் என்பதை உள்ளத்தாலும் தோற்றத்தாலும் மெய்ப்பிக்கின்றனர். ‘எல்லோரும் ஆதாம் பெற்ற மக்களே’ என்ற சமத்துவ, சகோதரத்துவ உணர்வுகளை ஹாஜிகள் அனைவரும் பெறுகின்றனர். இந்த உணர்வு வழியில் வாழ அனைவரும் உறுதி கொள்கின்றனர்.

வாழ்வின் உட்பொருளை
உணர்த்தும் அரஃபாத்

ஹஜ்ஜின் அடுத்த முக்கிய நிகழ்வாக ஹாஜிகள் அனைவரும் அரஃபாத் பெருவெளியில் ஒரு பகல் மட்டும் தங்குகின்றனர். ஒரே விதமான இஹ்ராம் உடையுடுத்திய ஹாஜிகள் ஒரே வகையான கூடாரத்தில் தங்கி ஒரே வகையான உணர்வோடு தங்குகின்றனர். வேற்றுமையுணர்வுகள் அனைத்தும் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கின்றன. சமத்துவ உணர்வுக்கோர் ஒப்பற்ற எடுத்துக் காட்டாக இச்செயல் அமைகிறது.

மறுநாள் அரஃபாத் பெருவெளியின் தற்காலிகமாக அமைக்கப்பட்ட அக்கூடாரங்கள் அகற்றப்படுவதுபோல் தங்கள் உயிரும் இவ்வுடல் எனும் கூட்டிலிருந்து ஒரு நாள் பிரிக்கப்படும் என்ற வாழ்வியல் சூட்சம உண்மையை நிதர்சனமாக உணர்கின்றனர்.

இவ்வாறு ‘ஈதும் அள்ஹா’ எனும் தியாகத் திருநாளும் ஹஜ் பெருநாளும் உலக மக்களுக்கு தியாகம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உயரிய வாழ்வியல் இறை நெறிகளை உணர்த்திக் காட்டும் நிகழ்வுகளாக அமைந்து இறையருள் பெற வழிகாட்டி வருகின்றன.

நன்றி : தமிழ் ஓசை (மலேசியா)