உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



9. வலைஞர் வழங்கும் விருந்து

பாலை, முல்லை, குறிஞ்சி, மருதம் ஆகிய நிலங்களை, முறையே கடந்து செல்லும் பெரும்பாணன், இறுதியாகக் கடக்க வேண்டிய நெய்தல் நில இயல்பையும், அந்நிலம் வாழ் வலைஞர் வாழ்க்கை முறைகளையும் விளக்கத் தொடங்கினார்.

வலைஞர் குடில்கள், மெல்லிய மூங்கில்களை வரிசையாகப் பரப்பி, வஞ்சி அல்லது காஞ்சி மரத்தின் வெள்ளிய கொம்புகளை இடை இடையே இட்டுத், தாழை நார் கொண்டு கட்டி, தருப்பைப் புல் வேய்ந்து, பெய்யும் மழையால் நனையாவாறு சுவர்களைக் காத்தற் பொருட்டு, குறிய இறப்பை, நாற்புறங்களிலும் அமையக் கட்டப் பட்டிருக்கும். ஓடும் நீரில் எதிர்த்து ஏறும் மீன்களை வாரிக் கொட்டும் பறிகள், மனை முற்றத்தில் காணப்படும்.

உணவிற்குத் துணைக்கறியாகப் பயன்படவல்ல அவரை, பீர்க்கு, புடலை, பாகல் போலும் காய்களைத் தரும் கொடிகளை வளர்த்து, அவை பெருகப் படர்ந்து பயன் தரற்பொருட்டு, வளைந்து கவிர்த்த புன்னைக் கிளைகளை நட்டுப், போடப் பட்டிருக்கும் பந்தலும் ஆங்கு காணப்படும். மேலே பந்தல் நிழல் செய்ய, கீழே, மெத்தென்ற மணல் பரந்த அந்த இடம், இருந்து இளைப்பாறுதற்கு இனிதாக இருக்கும்.