பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

11



மீண்டும் குடும்பத்தோடு சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு இல்லை. அதற்கான முயற்சி எதுவும் செய்யாமல் ஏதோ ஒருவகையாக காலத்தைக் கழித்தார்.

“இந்த நிலையை, அன்பு இல்லாதது என்றோ, குறை உடையது என்றோ நாங்கள் யாருமே உணரவில்லை, பழக்க வழக்கங்களைப் பற்றியோ மற்ற உணர்ச்சிகளைப் பற்றியோ நாங்கள் கவலைப்பட்டதே இல்லை” என்று ஷா எழுதுகிறார்.

இதற்கெல்லாம் காரணம், சமுதாயத்திலிருந்து ஒருவாறு பிரிந்து வாழ்ந்த குடும்பமாக இருந்ததே ஆகும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, தந்தையின் குடிப்பழக்கம் ஒரு முடிவுக்கு வந்தது, ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவர் கீழே விழுந்து அடிபட்ட பெரிய துன்பமே அவரைத் திருந்தச் செய்தது. குடிப்பழக்கத்தை இனி நிறுத்தாவிடில், உயிர் போய்விடும் என அவரை உணரச் செய்தது. அவரும் அதை உணர்ந்தார். ஆனால், உணர்ந்தும் அதனால் பயன் இல்லை என்று சொல்லத்தக்கவாறு, இறுதிக்காலத்தில் உணர்ந்ததால் குடும்பத்துக்கு அதனால் எவ்வித நன்மையும் உண்டாகவில்லை.