பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லண்டன் பொருட்காட்சி நூல் நிலையத்துக்கு தினந்தோறும் போய், இடைவிடாமல் படிப்பதும் எழுதுவதும் அவருக்கு விருப்பமான கடமைகளாக ஏற்பட்டன.

இளமையில் கணக்கர் வேலை பார்த்து வந்த அனுபவத்தால், நாள்தோறும் ஏதேனும் படிப்பதும் எழுதுவதும், தவறாமல் செய்யவேண்டும் என்ற கொள்கை உண்டாகிவிட்டது.

ஆறு பென்னிக்குக் காகிதம் வாங்கி வைத்துக் கொண்டு நாள்தோறும் தவறாமல் ஐந்து பக்கங்கள் எழுதி வந்தார்.

அந்த முயற்சி, ஒரு பயனும் அளிக்காததைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் எழுதிவந்தார். ஊக்கம் இருந்தாலும், ஊக்கம் இல்லாவிட்டாலும், மழைக் காலமானாலும், குளிர்காலமானாலும் தவறாமல் ஐந்து பக்கங்கள் எழுதிவந்தார். ஒரு நாள் தடைப்பட்டு, எழுத இயலாமல் போனால் மறுநாள் அதையும் சேர்த்து இரண்டு மடங்காக எழுதி முடித்துவிடுவார்.

இத்தகைய திட்டத்தால், ஐந்து ஆண்டுகளில், ஐந்து நாவல்களை எழுதி முடித்திருக்கிறார். வறுமை வாட்டிய துன்பத்தை அவரால் மறக்க முடியவில்லை.