பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



26

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்



நடுக்கமும் உளறலும்

அந்த மன்றத்தில் பல பொருள்பற்றி, பலர் பேசி வந்தனர். ஒருமுறை நிகழ்ந்த சொற்போரில் எதிர்பாராமல் ஷா எழுந்து நின்று ஏதேதோ பேசிவிட்டார். அப்பொழுது அவருடைய கைகால்கள் எல்லாம் நடுங்கின. தம்மை மறந்த நிலையில் என்னவோ பேசினார். பேசிமுடித்த பிறகே என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரிந்ததாம். தம்முடைய பைத்தியக்காரத்தனத்தை எண்ணி வருந்தினாராம்.

அப்பொழுதே ஓர் உறுதி செய்து கொண்டார். அந்த மன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்துக்கும் தவறாமல் போக வேண்டும்; பேச வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் பேசிவிட வேண்டும். அதனால் என்ன நேர்ந்தாலும் நேரட்டும் என்ற துணிவு கொண்டார். அவ்வாறே நடந்தார். பேசுவதற்கு வாய்ப்புக் கிடைக்குமுன் ஒவ்வொரு முறையும் அஞ்சி அஞ்சிச் கலங்கியிருக்கிறார். தாம் எழுதிக் கொண்டு சென்ற குறிப்புக்களையும் படிக்க முடியாமல் தடுமாறியிருக்கிறார். ஆயினும் தம்முடைய குறை பிறருக்குத் தெரியாதபடி நடித்திருக்கிறார்.

திறமையான பேச்சாளர்

நாளடைவில் ஷா இல்லாத பட்டிமன்றமும், பேசாத கூட்டமும் இல்லை என்னும் நிலை உண்டாயிற்று.