பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

27



ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் பத்து கூட்டங்களில் ஷா பேசிய காலமும் உண்டு.

ஆரம்ப காலத்தில், அவர் சொன்ன கருத்துக்களைக் கேட்பவர் யாரும் இல்லை. ஆனால், முதுமைக் காலத்தில் அவருடைய ஒவ்வொரு சொல்லுக்கும் உலகமே காத்திருந்தது.

முன்பு, தம் கருத்துக்களை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்ற ஆவல் எழுந்தபோது அவர் ஹைட்பார்க் என்னும் இடத்துக்குச் சென்று வந்தார். ஒரு முறை, அவர் பேச்சைக் கேட்டவர்கள் யார்? புல் தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டிருந்த தெருவில் அலையும் சோம்பேறிகள், அவர்களில் ஒருவன் “கேளுங்கள், கேளுங்கள்” என்று கூறினானாம்.

மற்றொரு முறை, அதே இடத்தில் ஷா பேசியபோது ஆறு பேர்கள் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யார்? ஷாவைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட காவல் துறையினர். அதனால் மழை பெய்த போதிலும், அந்த இடத்தை விட்டு நகராமல், ஒன்றரை மணிநேரம் நின்று கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார்களாம்.

இவ்வாறு, முயன்று நன்றாகப் பேசக் கற்றுக்கொண்டார் ஷா. அவர் பின்னர் சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவராக புகழ்பெற்று விளங்கினார்.