பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



34

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்


ஒழுங்கற்று இருந்தது. புத்தகங்கள் தூசி படிந்து கிடந்தன. வேலைக்காரி வேளைக்கு உணவு கொண்டுவந்து, எட்டி நின்றபடியே மேஜைமீது வைத்து விட்டுப் போய்விடுவாள். ஷாவின் தாயோ அந்தப் பக்கம் வருவதே இல்லை. தாய்க்கும் மகனுக்கும் ஒரு வகையான வெறுப்பு இல்லை என்ற போதிலும் ஒருவர் பிரிவுக்கு மற்றவர் கவலைப்பட்டதே இல்லை. இத்தகைய வாழ்க்கையில் அவர்கள் ஒருவரை ஒருவர் காணாமலே பல நாட்களைக் கழித்தார்கள். ஷாவின் சகோதரிகளோ திருமணம் ஆனபின் தாய் வீட்டுக்கு அடிக்கடிவருவதில்லை.

இந்நிலையில், பாதத்தில் கிளம்பிய கட்டி ஆறாமல் ஷா துன்புற்று வாடிப்போனார். அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. ஊன்றுகோல் கொண்டு நடக்க வேண்டியிருந்தது. அந்த நிலையில்தான் ஷாவின் காதலியான டவுன்ஷெண்ட் வந்து கண்டாள். அந்த அறையில் அத்தகைய நிலையில் ஷாவை வைத்திருந்தால் உயிருக்கு ஆபத்தாக முடியும் என அஞ்சி, உடனே தன்னுடைய பண வசதியைக்கொண்டு வேறு இடத்தில் வீடு பார்த்து ஏற்பாடுகள் செய்து அவரைக் காப்பாற்ற முற்பட்டாள். ஷாவின் தாய் அதற்கு மறுப்பு எதுவும் கூறவில்லை. ஆனால் ஷா அதற்கு இசையவில்லை. தமக்காக ஒரு பெண் கெட்ட பெயர் தேடிக்கொள்வதற்கு அவர் உடன்படவில்லை.