பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

41



நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தினந்தோறும் ஷாவே உடன் இருந்து ஒத்திகை நடத்தி உதவி செய்திருக்கிறார்.

எல்லாம் முடிந்த பிறகு குறிப்புப் புத்தகம் ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு எதிரே போய் மெளனமாக உட்கார்ந்திருப்பார். நடிகர்களின் நடிப்பை நன்றாகக் கவனித்து, விடாமல் குறித்துக்கொள்வார். முடிவில் அவர்களிடம் சென்று தவறான இடங்களை எடுத்துக்காட்டி திருத்துவார். மேலும் தானே நடித்தும் பேசியும் காட்டுவார். திருத்தும்பொழுது பொறுமை, அன்பு, இன்சொல் ஆகிவற்றைக் கடைப்பிடிப்பார். நடிகர்களின் உடைகளிலும் கூட கவனம் செலுத்துவார்.

வெறும் கட்டுரைகளை எவரும் படிப்பதில்லை. ஆகையால், தம் கொள்கையை உணர்த்தி, அவர்களைத் திருத்த வேறு வழி இல்லாததைக் கண்டு, நாடகங்களின் வழியாகக் கவர்ச்சியை ஊட்டி, முகவுரைகளின் மூலம் கொள்கைகளை உணர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார் ஷா. அதனால், நாடகங்களைவிட நீண்ட முகவுரைகளை எழுதி வெளியிடுவது அவருக்கு வழக்கமாகிவிட்டது.

கலை உலகுக்கு அப்பாற்பட்டு நட்பு முறையில் பழகியவர்களுடன் மிகவும் அன்போடு ஷா பழகி வந்தார்; அவரோடு பழகியவர்களுக்கு அவரை விட்டுப் பிரிவது வருந்தக்கூடிய நிலைமையாகும்.