பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

51


பொருள்கள் ஒன்றும் வாங்கியதில்லை அப்போது வாங்குவதற்குப் பணமும் இல்லை. ஆனால் பிற்காலத்தில் பணம் நிறைய வைத்திருந்தபோதும் அத்தகைய பொருள்களை வாங்கவில்லை. நாள்தோறும் அம்மாதிரிப் பொருள்களை வாங்காமலேயே திரும்பி இருக்கிறேன். நான் பற்றற்ற துறவி அல்ல; தன்னைத்தான் சகித்துக்கொள்வதால் கடவுளின் அருளைப் பெறலாம் என்றோ, இறந்தபின் மறுமையில் உரிமை அதிகரிக்கும் என்று எண்ணும் கற்பனையும் என்னிடத்தில் சிறிதும் இல்லை. நான் விரும்பினால் செல்வந்தர்களைப் போல் ஆடம்பர வாழ்க்கை வாழ்வேன்; வாழமுடியும். ஆனால், நான் அந்த வாழ்க்கையை விரும்பவில்லை. அதனால் அவ்வாறு வாழவில்லை. தினசரி நடைமுறையிலும் அந்த வாழ்க்கையை விடாமல் ஆராய்ந்து வருகிறேன். அதன் பிற்கால விளைவுகளையும் விடாமல் கண்டு வருகிறேன். அத்தகைய வாழ்க்கை ஓர் ஆண்டு வாழ்வேனானால், கற்பனையிலும் காண இயலாத அளவு துன்பமான நிலைமை எனக்கு வந்துசேரும் என்பதை நான் அறிவேன். சோம்பல் மிகுந்த செல்வந்தர்களைப் போல் பல நாட்களில், பிற்பகல்களைக் கழித்திருக்கிறேன். அதனால் அது எத்தகையது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். தற்கொலையைப் போல எனக்குத் தோன்றுகிறது” என்று தெளிவாகக் கூறினார். அதனால்தான் அவர் எளிமையான, செம்மையான வாழ்வை விரும்பிப் போற்றினார்.