பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



62

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்



பொழுது போக்குக்காக, ஷா எதில் ஈடுபட்டபோதிலும் படிப்பும், எழுத்துமே அவருக்கு முக்கிய குறிக்கோளாக இருந்தது.

“படிப்பு என்பது ஒருவருடைய இளமையோடு மட்டும் தொடர்பு உடையது அல்ல; எனக்கு எண்பத்தெட்டாவது வயது நடக்கிறது. ஆனால், இன்னும் எவ்வளவோ படிக்க வேண்டியதிருக்கிறது” என்று எழுதுகிறார் ஷா.

வருமானத்தில் மிகவும் கருத்தாக இருப்பவர் ஷா. நாடக நிறுவனத்தாரையும், புத்தக வெளியீட்டாரையும் விட சட்ட நுட்பமும், நீதி இயலும் நன்கு அறிந்தவர்.

நாடக நிறுவனத்தாரும், புத்தக வெளியீட்டாளரும், வெறும் கனவு காண்போர் என்று ஷா குறிப்பிடுகிறார்.

அவர்களுடன் ஒப்பந்தங்கள் எழுதும்போது, தம்முடைய உரிமையையும், அவர்களுடைய நன்மையையும், கருத்தில் கொண்டு திறம்பட எழுதுவதில் கெட்டிக்காரர்.

சிறிதானாலும், பெரிதானாலும் எல்லாவற்றையும் கணக்குப் பார்த்து நிர்வகிக்க கற்றுக்கொண்டார் ஷா.

கலையானது விற்பனைக்கு வரும்போது, அதற்கு உரிய தொகை விலையாகக் கிடைக்க வேண்டும் என்பது அவருடைய கருத்து. குறைந்த விலைக்கு விற்பதை அவர் எப்பொழுதுமே விரும்பமாட்டார்.