பக்கம்:பேசும் ஓவியங்கள்.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கூடாதா?


பெண்ணரசே! பெண்ணரசே! திரும்பக் கூடாதா? என்
பித்துமனத் தன்புணர்வை விரும்பக்கூடாதா?

கண்மணியே காவியமே வரவும் கூடாதா? நின்
காதல் மொழியின் யாழ் குரலை தரவும் கூடாதா?

தண்டமிழே இசைவடிவே! நெருங்கக் கூடாதா? நான்
தாமரை மொட்டிதழிலே தேன் அருந்தக்கூடாதா?

வெண்ணிலவே நின்னழகில் களிக்கக் கூடாதா? நின்
விருந்தினனாய் இன்பக்கடல் குளிக்கக் கூடாதா?

பொழியும் காதல் விழிப்பாட்டை உண்ணக்கூடாதா? நின்
பொங்கி எழும் வனப்புடலை எண்ணக் கூடாதா?

மொழியும் இசைத் தேனலையில் உலவக் கூடாதா? நான்
முத்தமிட்டு முத்தமிட்டுக் குலவக் கூடாதா?

எழில் தோளில் இணைந்துன்னில் படரக் கூடாதா? நாம்
இன்பவாழ்வுக் காதைதனைத் தொடரக் கூடாதா?

வழிகாட்டி வள்ளுவத்தைப் படிக்கக் கூடாதா ? நாம்
வாழ்க்கைக்கலை நாடகத்தை நடிக்கக் கூடாதா?