பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

னர். வேட்டைக்காரனின் பறைஒலி கேட்டதும், அடர்ந்த புதருக்குள் பதுங்கிக்கொள்ளும் சிறுத்தைபோல, ஆள் அரவம் கேட்டதும், புற்றுக்குள் புகுந்துகொள்ளும் பாம்பு போல, ஆரிய மார்க்கம், புதிய வேகத்துடன் கிளம்பி திக்கெட்டும் வீசிய புத்த மார்க்கத்தைக் கண்டு, பதுங்கிக் கொண்டது.

சிவவிஷ்ணு ஆலயங்கள் எப்போதும்போலிருந்தன—சிகை வளர்த்து, ஜெபமாலை ஏந்திய குருமார்களும் வழக்கம்போல எங்கும் அரச அவையிலும் இருந்துவந்தனர்; திருவிழாக்கள் எப்போதும்போலவே நடைபெற்று வந்தன். ஆனால், இவைகளிடம், மக்களுக்கு முன்பிருந்த ஆர்வம் இல்லை; அவர்களின் மனமெல்லாம், புத்தர் காட்டிய புது நெறியிலே சென்று படிந்தது.

புத்த மார்க்கம், மக்களைக் கூவி அழைத்தது—அதிலும், சமூகத்திலே, ஜாதியினால் தாழ்த்தப்பட்டுக் கிடந்த மக்களை, தங்கள் மீட்சிக்கு ஓர் வழி உண்டு என்ற நம்பிக்கை கொள்ளும்படி செய்தது. ஆண்டவன் அருளைப் பெறுவது, பாமரராகிய நம்மாலும் ஆகக்கூடிய காரியம் தான் என்று பௌத்தம் கூறிற்று.அடவி சென்று கடுந்தவம் புரிந்தால்தான் அவன் அருள் பெறலாம்: வேதாகமம் தெரிந்தால்தான் திருவருள் பெற முடியும் வேள்வி செய்தால்தான் விமோசனம் கிடைக்கும், பூதேவரின் ஆசி இருந்தால்தான் இகத்திலும் பரத்திலும் இன்பம் கிடைத்திடும், என்று பழைய மார்க்கம் கூறி வந்தது! இது தங்களால் முடியாத காரியம் என்பதால், நாட்டுப் பெருங்குடி மக்கள், தங்கள் விடுதலையும் விமோசனமும் யாராவது ஓர் குருவினாலேதான் தேடித் தரமுடியும் என்று எண்ணி, மேய்ப்பவன் அழைத்துச் செல்லும் இடம் செல்-