பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

லும் மந்தைபோலிருந்தனர். புத்தரோ, புதியபாதை வகுத்துக் காட்டினார்—வேதம் வேண்டுவதில்லை—வேள்வி செய்ய வேண்டுவதில்லை—தவம் தேவையில்லை, அதற்காக ஊசி முனைமீது நிற்பது, மண்டையை உருக்கும் வெயிலில் நிற்பது, நீரில், நெருப்புக்குண்டத்தில், தலைகீழாக, முட்பாயின்மீது, இவ்விமெல்லாம் இருந்தாகவேண்டும் என்பதில்லை—எல்லையற்ற இன்பம் பெற, மனத்தூய்மை வேண்டும், நல்வாழ்க்கை வாழவேண்டும், இது உன்னால் செய்யக் கூடிய காரியம்தான், என்று கூறித் தைரியமும் தன்னம்பிக்கையும் ஊட்டினார்.

ஆரியம்,எல்லா நிலைகளுக்கும், பூர்வாகமத்தையே காரணமாகக் காட்டிற்று; அவன் அரசனாக இருப்பதும் இன்னொருவன் அன்னக்காவடியாக இருப்பதும்; ஒருவன் பொன்மேனியனாக இருப்பதும், மற்றொருவன் புழு நெளியும் புண்கொண்ட உடலுடன் இருப்பதும், ஒருவன செல்வத்தில் புரள்வதும் வேறொருவன் வறுமையால் வாடுவதும், எல்லாம், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட திட்டம்; தாப்பட்ட தீர்ப்பு; ஏற்படுத்தப்பட்ட அமைப்பு, கடவுளின் திட்டம்; இதை மாற்றவோ, எதிர்க்கவோ, இது கண்டு மனம் குமுறலோ, கூடாது; செய்திடின் மற்றும் பாபம் வந்து சேரும்—அந்தப் பாப மூட்டைகளைச் சுமந்துகொண்டு, நரகம் சென்று நாசமாகவேண்டும், என்று கூறிவந்தது.

புத்தமார்க்கமோ, ஒழுக்கம், ஆசையைக் களைதல், அன்பு எனும் அருமுறைகளைக் கடைப்பிடித்தால், மக்கள் பேரின்பம் பெற முடியும் என்ற நம்பிக்கையைத் தந்தது.

மக்களின் வாழ்க்கைப் பிரச்சினையை,—தேவ பாஷையில் அல்ல—மக்களின் மொழியில் கூறிற்று புத்த மார்க்கம்.