பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


புத்த மார்க்கத்தினரின் ஒழுக்கமும் உயர் பண்பும், அன்பு நெறியும், அற உரையும், மக்களை, ஆரியத் தளைகளை நொறுக்கிடும் நிலைக்குக் கொண்டுவந்தது. அஞ்சிய ஆரியம் மூலைசென்றது, முக்காடிட்டுத் திரிந்தது, பிறகு புத்த மார்க்கத்துக்கு ‘முகஸ்துதி’ செய்யலாயிற்று! நெஞ்சிலே மூண்ட பொறாமைத் தீயை மறைத்துக்கொண்டு, புத்த மார்க்கத்தின் பொன்மொழிகளைத் தாமும் ஏற்றுக்கொண்டு, அதற்கேற்றவண்ணம், ஆரிய மார்க்கத்தின் முறைகளையும், திருத்தி அமைத்துக் கொள்வதாகக் காட்டிக்கொண்டது. ஆனால் சமயம் கிடைத்தபோதெல்லாம், கலகமூட்டிவிடுவதும், மோதுதல்களை உண்டாக்குவதுமாக இருந்தது. சிலர் வஞ்சக நினைப்புடனேயே புத்த மார்க்கத்தைத் தழுவிக் கொண்டு, உள்ளிருந்தே கேடு செய்யலாயினர்—நாலந்தா பல்கலைக்கழகமே தீயோரால் தீக்கிரையாக்கப்பட்டது. புத்தருக்குப் பிறகு, இந்தக் கேடுதரும் முறை புதிய வலிவு பெற்றது. மீண்டும் மக்களை மயக்கினர் மதவேடமிட்டு–மன்னர்களும் கிடைத்தனர்— சமர்கள், சச்சரவுகள் கிளம்பலாயின! அடுத்துக் கெடுத்தல் எனும் முறை ஆரியத்துக்கு வெற்றி தாலாயிற்று புயல் ஓய்ந்துவிட்டது—புறப்படலாம் வெளியே என்று கிளம்பினர்—கலகம், குழப்பம், பெருகிற்று—ஆரியம் மீண்டும் அரசோச்சக் கிளம்பிற்று.

தெளிவற்றோரின் மனதிலே பொருளற்ற கதைகளும் மருளூட்டும் நிகழ்ச்சிகளும், எளிதிலே மாற்றத்தை உண்டாக்கிவிடுகிறது — இந்த நிலை, ஆரியத்துக்கு மெத்தப் பயன்பட்டது.

மனதை நெகிழச்செய்யும் பிரச்சார முறையான கலைனய ஆரியம் மிகமிகத் திறமையுடன் சுருவியாக்கிக்கொண்டது.