பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


அவருடைய அறிவாற்றலை அனைவரும் அறிவர்—மாற்றாரும் அவருடைய நாணயத்தை, சந்தேகிப்பதில்லை—சாது.

நாட்டு விடுதலைப்போரிலே, அவர் காட்டிய வீரம், அபாரம். பட்ட கஷ்ட நஷ்டம் அமோகம்! காந்தீயத் தியாகத்தீயிலே புடம்போட்ட தங்கம்! இவைகளை மறுப்பார் இல்லை

வம்பு வல்லடிக்குப் போகாதவர்! சூழ்ச்சி சூது தெரியாதவர், என்று எல்லாக் கட்சியினரும் கூறுவர். அப்படிப் பட்ட பாபு ராஜேந்திரரை மனக்கண்முன் கொண்டுவாருங்கள்.

அதோ, டில்லிப் பட்டணத்தில், சாம்ராஜ்யாதிபதிகளும், ரணகளச் சூரர்களும் உலாவிய டில்லியில், உலகிலே உள்ள வியக்கத்தக்க மாளிகைகளிலே ஒன்றான, ‘ராஷ்ட்ரபதி பவனில்’ கொலுவீற்றிருக்கிறார். குற்றமென்று கூறவில்லை. இந்தியாவுக்கு ஆட்சித் தலைவராக வருபவர், குடிசையிலே வாழவேண்டும் என்று கூறினாரே காந்தியார், என்று கூடக்குத்தலுக்குக் கூறவில்லை! பாபு, ராஷ்ட்ரபதி பவனிலே இருப்பது கண்டு, கேலி பேசவில்லை. இருக்கிறார், எழில்மிக்க மாளிகையில்—இந்தியத் துணைக்கண்டத்தின் முடிசூடா மன்னராக!

அதோ, அமெரிக்க நாட்டுத் தூதுவர், அவருடன் கரம் குலுக்குகிறார்!

இதோ, நார்வேநாட்டு நல்லெண்ணத் தூதுக் குழுவினர்! பாபு, அவர்களுடைய கரத்தைக் குலுக்கி வரவேற்கிறார்.