பக்கம்:பொன் விலங்கு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

பொன் விலங்கு

கத்தியோடு வந்து மிரட்டிய பையனுக்காக நடுங்கிய நடுக்கத்தைத் தவிர பூபதி அவர்களின் அதிகார மிடுக்குடன் கூடிய கம்பீரமான சிங்கநாதக் குரலுக்காகவும் வேறு நடுங்கினார் ஹெட்கிளார்க்.

"நானும் என்னால் ஆனமட்டும். குறுக்கே பாய்ந்து தடுத்துப் பார்த்தேன் சார்.இந்தப் படுபாவி பிரின்ஸிபல் மேலே பாய்ந்து விட்டான். வலது தோளிலே ஒரு விரற்கட்டை ஆழத்துக்குக் கத்திக்குத்து அவருக்கு. ஆம்புலன்சுக்கு ஃபோன் செய்து அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பியாச்சு... எல்லாம் போதாத வேளை...கூர்க்காக்கள் ஓடி வந்து பிடித்திருக்காவிட்டால்... இந்தப் பையன் என்னையும் என்ன செய்திருப்பானோ?..."

உணர்வு வசப்பட்டுப் பேசும்போதே பயத்தினால் ஹெட்கிளார்க் வாய் குழறினார். அப்போது அப்பாவின் முகம் சிவந்து கண்கள் ஒளி மின்னுவதைப் பார்த்து பாரதிக்கே பயமாக இருந்தது. அவளோடு மேலே வராந்தா மேடையின் மீது நின்று எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தவர் ஒவ்வொரு படியாக அழுத்திக் கால்களை ஊன்றிக் கொண்டிருந்த அந்தப் பையனுக்கு முன் மிக அருகே போய் இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக்கொண்டு நிமிர்ந்து நின்றார். அந்த நிலையில் அப்பாவைப் பார்ப்பதற்கே பயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது பாரதிக்கு, 'நீங்கள் இருவரும் இந்தப் பையனைப்பிடித்திருக்க வேண்டாம் விட்டுவிடுங்கள்' என்ற பாவனையில் கூர்காக்களிருவருக்கும் ஜாடை காட்டினார் பூபதி, அவர்கள் அப்படிச் செய்யத் தயங்கினார்கள். அவனை விட்டுவிட்டால் அவன் பூபதி அவர்கள் மேலோ, ஹெட்கிளார்க் மேலோ கத்தியை ஓங்கிக்கொண்டு பாயக்கூடும் என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. ஹெட்கிளார்க்கும் அப்படியே பயந்தார். அந்தப் பையன் வெறியோடு நின்ற நிலையைப் பார்த்து பாரதியும் பயந்தாள். ஐயோ! அப்பா இப்படிப் பயப்படாமல் இந்தக் கொலைபாதகனுக்கு அருகில் போய் நிற்கிறாரே?' என்று உள்ளுர நடுங்கிக் கொண்டேதான் பாரதி நின்றாள். பூபதியோ ஒருவிதமான சலனமும் இல்லாமல் மிகவும் திடமாக அந்தப் பையனுக்கு அருகே நிமிர்ந்து நின்று கொண்டு கேள்விகளைத் தொடுத்தார்.

"உன் பெயர்..?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/118&oldid=1356255" இலிருந்து மீள்விக்கப்பட்டது