பக்கம்:பொன் விலங்கு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

பொன் விலங்கு

இலட்சியத்தினாலும் மாணவர்கள் தங்கிப் பயிலும் விடுதிக் கட்டுப்பாடுகளாலும் தமிழ்நாட்டு மக்களிடம் பெரும் புகழ்பெறத் தொடங்கியிருந்தது அந்தக் கலைக் கல்லூரி. மிகப் பெரிய நகரங்களில் உள்ளவர்களும்கூட அந்தச் சிறிய மலை நகரத்தைத் தேடிப் போய்த் தங்கள் பிள்ளைகளையோ, பெண்களையோ சேர்க்கத் தவிப்பதும் சிபாரிசு தேடுவதும் வழக்கமாயிருந்தது. அங்கு சேர்ந்து கல்வி கற்பதையே ஒரு பாக்கியமாகக் கருதினார்கள் பலர்.

சத்தியமூர்த்தி மனம் ஈடுபட்டு ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்போது இலகுவாகத் தேர்ந்தெடுக்கத் துணிந்துவிடமாட்டான்.

"நல்ல வேலையாகத் தேடிப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது கிடைக்கிறவரை உண்மையே மேலெழுந்து நிற்பதுபோல் உயர்ந்து தோன்றும் மதுரையின் இந்தக் கோபுரங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதையே நான் ஒரு வேலையாகச் செய்து கொண்டுதான் இருக்கிறேன்" என்று தத்துவம் பேசிக் கொண்டிருந்த சத்திய மூர்த்தியே இண்டர்வியூவுக்குப் புறப்பட்டதைக் கண்டபின் மல்லிகைப் பந்தல் என்ற அந்த ஊரும் அதன் பெருமைக்கு ஒரு காரணமான பூபதி கலைக் கல்லூரியும் ஏதோ ஒரு விதத்தில் நிச்சயமான தகுதி வாய்ந்தவையாயிருக்கும் என்பது மேலும் உறுதியாகி விட்டது.

மாணவனாயிருக்கும்போதே சத்தியமூர்த்திக்கு நெஞ்சு உரம் அதிகம். எவ்வளவு வெம்மையான அநுபவமானாலும் தாங்கிக் கொண்டு அந்த வெம்மையையே உண்டு வலிமை பெறுவது அவன் வழக்கம். கல்லூரி நாட்களில் சகமாணவர்கள் அவனுக்கு நெருப்புக் கோழி என்றுகூடச் சூடாக ஒரு பெயர் வைத்திருந்தார்கள். கல்லூரியில் மாணவர்களின் யூனியன் தலைவனாக இருந்து அவன் சாதித்த சாதனைகளும் சமாளித்த எதிர்ப்புக்களும் என்றும் மறக்க முடியாதவை. மாணவனாய் இருந்த காலத்தில் தன்னுடைய ஒவ்வொரு நோட்டுப் புத்தகத்திலும் கல்லூரியில் தான் தங்கிப் படித்த விடுதி அறையிலும் கீழ்க்கண்ட வாக்கியத்தைக் கொட்டை எழுத்துக்களில் பெரிதாக எழுதிவைத்துக்கொள்வது அவன் வழக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/12&oldid=1405629" இலிருந்து மீள்விக்கப்பட்டது