பக்கம்:பொன் விலங்கு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

119

ஆஸ்பத்திரியைத் தேடிக்கொண்டு யாராவது போலீஸ்காரர்கள் போக நேர்ந்து, இவர் அவர்களிடம் ஏதாவது ஸ்டேட்மென்ட்கொடுக்காமல் தடுக்க வேண்டும். இதெல்லாம் சகஜம். சிறுபிள்ளைகளை அதிகம் மன்னித்துத்தான் திருத்த முடியும்” என்று ஹெட்கிளார்க்கிடம் சொல்லியபடியே மகள் நின்று கொண்டிருந்த பக்கமாகத் திரும்பி “பாரதி! காரை எடு அம்மா ஆஸ்பத்திரி வரை போய்ப் பிரின்ஸிபலைப் பார்த்துவிட்டு வருவோம். இன்றைக்கு எஸ்டேட்டுக்குப் போகவேண்டாம். இப்படிஎல்லாம் ஆகிவிட்டதே? என்ன செய்வது ஒரு வாரம் கழித்துப் போகலாம்...” என்றார் பூபதி. பாரதி காரை எடுப்பதற்காக நடந்தாள். அப்போது அவளுக்கென்னவோ தோன்றியது. சத்தியமூர்த்தியைப்போல் அழகிய முகமும், அழகிய மனமும், அழகிய பேச்சும் உள்ள ஓர் ஆசிரியர் தங்கள் கல்லூரிக்கு வந்து சேர்ந்துவிட்டால் இப்படிப்பட்ட முரட்டு இளைஞர்களைக் கூடச் சதா தன்னைச் சுற்றிக் கை கூப்பிக்கொண்டு திரிகிற பைத்தியங்களாகச் செய்துவிட அவரால் முடியும் என்று நினைத்தாள் பாரதி. அப்படிப்பட்ட அழகும் தகுதியும் உள்ளவரைப் பற்றி வெறும் இளைஞர் என்று அப்பாவிடம் குறை சொல்லித் தள்ளிவிடப் பார்த்த இந்தப் பிரின்ஸிபலுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று சிறுகுழந்தை கோபப்படுவதுபோல் கோபித்துக்கொண்டேகாரை எடுத்தாள் பாரதி.

9

தன்னையும் தன்னுடைய தேவைகளையும் தவிர மற்றவர்களும், மற்றவர்களுடைய தேவைகளும் உலகத்துக்கு அநாவசியம் என்று ஒவ்வொருவருமே தங்களைத் தனித் தனியாகப் பிரித்துக் கொண்டு திருப்தியடைந்து விட்டால் அப்புறம் வாழ்க்கையே காட்டுமிராண்டித் தனமாகப் போய்விடாதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/121&oldid=1356439" இலிருந்து மீள்விக்கப்பட்டது