பக்கம்:பொன் விலங்கு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

பொன் விலங்கு

அங்கயற்கண் அம்மை தன்னோடு ஆலவாய் நகரமாகிய மதுரை மாநகரத்தில் கோயில் கொண்டருளியிருக்கும் மதிப்பிற்குரிய சொக்கநாதப் பெருமான் பல தலைமுறைகளுக்கு முன் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் புரிந்து புகழ்பெற்றார் என்பார்கள். இன்றைய மதுரையில் ‘மூன்லைட் அட்வர்டைலிங்’ ஏஜன்ஸி யோடும் அதன் விளம்பரப் பிரதாபங்களோடும் கோவில் கொண்டருளியிருக்கும் திருவாளர் கண்ணாயிரம் அவர்களோ தம்முடைய ஒவ்வொரு நாளிலும் எண்ணத் தொலையாத பல திருவிளையாடல்களைப் புரிந்து புகழ் பெற்றுக் கொண்டிருந்தார். கண்ணாயிரம் அவர்களுடைய ஒவ்வொரு விநாடியும் ஒரு திருவிளையாடலே. சொக்கநாதப் பெருமானுக்கு இந்த நூற்றாண்டில் அவதாரம் செய்து திருவிளையாடல் புரியும் உத்தேசம் ஏதாவது இருக்குமானால் அவர் அநாவசியமாக நம்முடைய கண்ணாயிரம் அவர்களிடம் தோற்றுப் போய்விட நேரிடும். தெரிந்துதான் முன்பே பெற்றோர்கள் அவருக்கு இப்படிப் பெயர் வைத்தார்களோ என்னவோ. கண்ணாயிரத்துக்கு ஆயிரம் கண்கள், ஆயிரம் மனம், ஆயிரம் திட்டங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாத வியாபார மனம் அவருடையது. இந்த விநாடியில் பார்த்த பார்வை அடுத்த விநாடிவரை அப்படியே இருக்காது. இந்த விநாடியில் நினைத்த மனம் அடுத்த விநாடிவரை அப்படியே நினைக்காது. அவருடைய ஒரு திட்டத்தில் நூறு தீட்டங்கள் அடங்கியிருக்கும். “கண்ணாயிரம் நீங்கள் பெரிய காரியவாதி” என்றோ “நீர் பெரிய காரியவாதி ஐயா”- என்றோ நண்பர்கள் தங்கள் தங்கள் பழக்கத்தின் தரத்துக்கேற்றபடி எப்போதாவது கண்ணாயிரத்தைக் குத்திக் காட்டினால் அதற்குக் கண்ணாயிரம் சொல்கிற மறுமொழி மிகவும் பிரமாதமாயிருக்கும்.

“நீங்கள் என்னைக் காரியவாதி என்று ஒப்புக் கொள்வதற்காக நான் பெருமைப்படுகிறேன். நாம் நம்முடைய அவசியத்துக் காகத்தான் வாழ வேண்டுமேயொழிய அநாவசியமாக ஒரு விநாடிகூட வாழக்கூடாது. நமக்கு நாமும் நம்முடைய தேவைகளும் தான் அவசியம்... அதற்கு அப்பால் மற்றவை யெல்லாம் அநாவசியம்...” என்று அழுத்தம் திருத்தமாகப் பதில் சொல்வார் கண்ணாயிரம். “தன்னையும் தன்னுடைய தேவைகளையும் தவிர மற்றவர்களும், மற்றவர்களுடைய தேவைகளையும் உலகத்துக்கு அநாவசியம் என்று ஒவ்வொருவருமே தங்களைத் தனித்தனியாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/122&oldid=1356469" இலிருந்து மீள்விக்கப்பட்டது