பக்கம்:பொன் விலங்கு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 137

கொண்டிருப்பதாக ஒரு காட்சியை வரைந்துவிட்டு அதைப் பார்த்துக் கொண்டு நிற்கும் போதே அதைப் பார்த்த படைப்புக் கடவுளின் தலைச் சுற்றுவதாகவும் ஒரு கார்ட்டுன் எழுதித் தேவர்கள் எல்லாம் படிக்கிற பத்திரிகை ஏதாவது ஒன்று இருந்தால் அதற்கு அனுப்பிப் பிரசுரம் செய்யச்சொல்ல வேண்டும்டா சத்தியம்' என்று அடிக்கடி சொல்வான் குமரப்பன். இப்படி ஏதாவது குறும்புத்தனமாகச் சொல்லாமல் சும்மா இருக்க முடியாது அவனால்.

'மனிதனுடைய நெஞ்சம் சதாகாலமும் பணம் காசு பற்றித்தான் எண்ணித் தவித்துக் கொண்டிருக்கும் என்று நெஞ்சின் மேல் பணப் பைக்கு இடம்விட்டுச் சட்டை தைக்கத் தொடங்கிய முதல் தையல்காரன்தெரிந்துகொண்டிருக்கிறான்பார்த்தாயா?" என்று இப்படி ஏதாவது ஆழமான குறும்புத்தனமுள்ள வாக்கியத்தை முன்னும் பின்னும் தொடர்பில்லாமல் இருந்தாற் போலிருந்து திடீரென்று சொல்வான் அவன். குமரப்பனோடு பழகுவதே ஒரு சுவாரஸ்யமான அநுபவம். அவனைச் சந்தித்துப் பேசத் தொடங்கினால் அந்த சந்திப்பையும் பேச்சையும் முடிக்க வேண்டுமென்று தோன்றாது. இந்த உலகமே தன்னுடைய கேலிக்கும் அலட்சியத்துக்கும் குறும்புப் பேச்சுக்குமாக மிகவும் சுதந்திரமாய் விமரிசனம் செய்வதற்கென்றே படைக்கப் பட்டிருப்பது போலப் பாவித்துக் கொண்டு பேசும் கலைத் திமிர் குமரப்பனிடம் உண்டு. இந்தக் கலைத்திமிரும் கூட விரும்பத்தக்க விதத்தில் இருக்குமே ஒழிய வெறுக்கத்தக்க விதத்தில் இருக்காது. எப்போதும் போலக் குமரப்பனைப் பார்த்ததும் அவனுடைய விசித்திரமான குணங்கள் எல்லாம் சத்தியமூர்த்திக்கு ஞாபகம் வந்தன.

“என்னடா இது? ஏதோ சந்திக்கக்கூடாத ஆளை எதிரே சந்தித்து விட்டாற்போல் அப்படியே மலைத்துப் போய் நின்றுவிட்டாய்? தபாலாபீசுக்கே நேரில் தேடிவந்து சிரத்தையாகப் பெட்டியில் போடவேண்டிய ஏதோ ஒரு கடிதத்தை எடுத்துக்கொண்டு இந்த வெய்யிலில் நீயே வந்திருக்கிறாய்!...” என்று சிரிப்பும் குத்தலுமாகப் பேச்சை ஆரம்பித்தான் குமரப்பன்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை குமரப்பன் திடீரென்று உன்னை எதிரே பார்த்ததும் ஒரு பெரிய சர்வகலாசாலையையே நேருக்கு நேர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/139&oldid=595077" இலிருந்து மீள்விக்கப்பட்டது