பக்கம்:பொன் விலங்கு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 147

வருவோரிடமெல்லாம், "பிள்ளைத்தாய்ச்சிக்கு உபகாரம் பண்ணிக் காப்பாத்துங்க ஐயா...' என்று கதறிக் கொண்டிருந்த அந்தப் பெண், வயிற்றில் மண்பானையை வைத்துக் கட்டிக்கொண்டு பிறரை மனம் இரங்கச் செய்வதற்காக நடித்திருக்கிறாள். அவளுடைய போதாத காலமோ அல்லது உண்மை வெளிப்பட்டுத் தெரிய வேண்டிய காலமோ கிழிந்து நைந்து இற்றுப்போன பழைய சேலை தாங்காமல் பானை கீழே விழுந்து உடைந்து அவளைக் காட்டிக் கொடுத்து விட்டது. இப்படி ஒரு காட்சியைச் சினிமாவிலோ, நாடகத்திலோ பார்த்திருந்தால் அந்த நடிப்புத் திறமையை மக்கள் புகழ்ந்திருப்பார்கள். வாழ்க்கையில் கண்ணெதிரே வயிற்றுக் கொடுமை தாங்காமல் ஓர் ஏழைப்பெண் இப்படி நடித்ததையும் மன்னிக்கலாம் தான். ஆனால் மன்னிப்பதற்கு அங்கு யாரும் தயாராயில்லை.

'வயித்திலே பானையைக் கட்டிக்கிட்டு இத்தினிநாளா இந்த மரத்தடியிலே டிராமாவா ஆடிக்கிட்டிருந்தே. மானங்கெட்ட கழுதை...' என்று திட்டிக்கொண்டே காரித் துப்பினான் ஒருவன். தெரு ஒரமாகச் சாலை போடுவதற்காகக் குவித்திருந்த சரளைக் கற்குவியலிலிருந்து கல்லை எடுத்து வீசினான் ஒரு சிறுவன். அது அவள் முன் நெற்றியில் பட்டு இரத்தம் கசிந்தது. தன் வீட்டுக் கவலைகளும், தனக்காகத் தான்பட வேண்டிய வேதனைகளும் ஆயிரம் இருந்தாலும் சத்தியமூர்த்தி இப்போது அந்த ஆலமரத்தடியில் கூடியிருந்த கூட்டத்தோடு தயங்கி நின்றான். சும்மா நின்று கொண்டு, பிச்சை போடும்படிகைகளை முன்னால் நீட்டினால் இவளுக்கு யாரும் இரங்க மாட்டார்கள். வயிற்றின் கொடுமை இவளை இவ்வளவு தந்திரமாக யோசிக்கச் செய்து பானையைக் கொண்டு கர்ப்பிணியாக நடிக்கச் செய்திருக்கிறது. குமரப்பன் இப்போது அருகிலிருந்தால் இந்தத் தந்திரத்தைக் கண்டு செயலாக்கியதற்காக இவளைப் பாராட்ட வேண்டும் என்பான். இங்கோ சொல்லால் அடிக்கிறவர்களும், கல்லால் அடிக்கிறவர் களுமாக இவள் மேல் ஆத்திரப்படுகிறவர்களே கூடியிருக்கிறார்கள். இவள் இப்படிச் செய்ததற்காக இவள் மேல் மட்டும் கோபப்பட்டு என்ன பயன்? இவளைப் பசிக் கொடுமையால் இப்படிச் செய்யவிட்ட சமூகத்துக்கும் இந்தக் குற்றத்தில் பங்கு உண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/149&oldid=595099" இலிருந்து மீள்விக்கப்பட்டது