பக்கம்:பொன் விலங்கு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

15

ஏதோ சாப்பிட்டோம் என்று பெயர் செய்து முறையைக் கழிப்பதற்காக இரயில் நிலையத்துப் பழக்கடையில் நாலு மலைப் பழம் வாங்கிச் சாப்பிட்டபின் 'வெயிட்டிங் ரூமி'ல் காலியாக இருந்த கட்டில் ஒன்றில் தலைக்கு அனைவாக சூட்கேஸை வைத்துக்கொண்டு படுத்தான் சத்தியமூர்த்தி. தூக்கம் வரவில்லை. கட்டிலில் புரண்டு கொண்டே விடியப்போவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். பொழுது விடிந்ததும் பஸ் நிலையத்துக்குப் போய் மல்லிகைப் பந்தலுக்குச் செல்கிற முதல் பஸ்ஸைப் பிடித்துப் புறப்படவேண்டும். அப்படிப் போனாலும் இண்டர்வியூவுக்காகக் குறிப்பிட்டிருக்கும் நேரத்துக்கு மேலே அரைமணி நேரம் தாமதமாகிவிடும். ஆனால் பரவாயில்லை. எவ்வளவு கண்டிப்பான மனிதர்களாக இருந்தாலும் உண்மைக்கு ஒரு நிமிஷம் நெகிழ்ந்துதான் ஆக வேண்டும். எனக்கு பஸ் கிடைக்கவில்லை என்பது உண்மை. தாமதமாக இண்டர்வியூவுக்கு வர நேர்ந்ததற்கு அதையே நான் காரணமாகச் சொல்லலாம். தவிரவும் பூபதி அவர்களைப் போல் கண்டிப்பிலும் கட்டுப்பாட்டிலும் அக்கறை உள்ளவர்கள் உண்மையை மதிப்பதிலும் அக்கறை உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டே படுத்திருந்த சத்தியமூர்த்தி சூட்கேஸின் மேல் வைத்திருந்த தன் தலை பட்டென்று கட்டிலில் மோதும்படி இருட்டில் ஒரு கை சூட்கேஸை உருவிவிட்டு நழுவியதை அவசரமாக உணர்ந்து அப்படியே தாவி எழுந்து அந்தக் கையையும் சூட்கேஸுடன் சேர்த்துப் பிடித்துவிட்டான். அவன் படுத்துக் கொண்ட சிறிது நேரத்துக்கெல்லாம் வெளிச்சத்தில் தூக்கம் வராத யாரோ ஒரு பிரயாணி விளக்கை அணைத்திருந்தார். இருட்டில் சத்தியமூர்த்தி விழித்துக் கொண்டிருக்கிறானா, தூங்குகிறானா என்பதைப் புரிந்து கொள்ள முடியாததால் திருட வந்தவன் கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்டான். வேறு யாராகவாவது இருந்தால் விளக்கைப் போட்டு வெயிட்டிங் ரூமில் தூங்கியும் தூங்காமலும் இருந்த அத்தனை பேரையும் எழுப்பிப் பெரிய கலவரம் உண்டாக்கியிருப்பார்கள். சத்தியமூர்த்தி ஓசைப்படாமல் பிடிபட்ட கையையும் சூட்கேஸையும் சேர்த்து இழுத்துக்கொண்டு ஸ்டேஷன் பிளாட்பாரத்துக்கு வந்தான். சூட்கேஸை உருவிக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/17&oldid=1405624" இலிருந்து மீள்விக்கப்பட்டது