பக்கம்:பொன் விலங்கு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி r 175

"நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். நான் உங்களை நினைத்து உங்களைப் பார்த்துப் பெற்ற உற்சாகத்தினால்தான் அப்படி ஆடமுடிந்தது. நீங்கள் நன்றாயிருக்கிறது என்று சொல்வதைவிட வேறு எந்த பாக்கியத்தை நான் எதிர்பார்க்க முடியும்?" -இப்படிப் பேசும்போதே அவள் கண்களில் நீர் மல்கிற்று.

சத்தியமூர்த்தி பதில் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் பார்வையால் பேசும் அந்தக் கண்களையும் பதங்களால் பேசும் அந்த மயக்கும் இதழ்களையும் பார்த்துக் கொண்டே நின்றான். கிரீன் ரூமிலிருந்த அவளுடைய தாய் அவளைக் கூப்பிடும் குரல் கேட்டது. கண்ணாயிரம் வேறு நட்டுவனாரோடு பேசிக்கொண்டே பின்பக்கமாகப் படியிறங்கிப் பூங்காவுக்குள் வந்து கொண்டிருந்தார். தான் அங்கிருந்து புறப்பட வேண்டிய நேரம் வந்து விட்டதென்பது அவனுக்குப் புரிந்தது.

"நான் வருகிறேன். வெளியே நண்பன் ஒருவன் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். நீங்களும் ஆடிக் களைத்திருக்கிறீர்கள், வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் போல் இருக்கிறது. உங்கள் அம்மாவின் குரல் வேறு உள்ளேயிருந்து மிரட்டுகிறது. கண்ணாயிரம் வேறு வந்து கொண்டிருக்கிறார். நாம் மறுபடி சந்திக்கலாம்..." என்று அவளிடம் விடை பெற்றுக்கொண்டு அவன் கிளம்ப முயன்றபோது பதில் சொல்ல நா எழாமல் கலங்கிய கண்களுடனேயே கைகூப்பி விடை கொடுத்தாள் அவள். அந்தச் சந்திப்பை அப்படி அரை குறையாக முடித்துக்கொண்டு விடை பெறுவது அவனுக்கும் என்னவோ போல் இருந்தது. ஆயினும் குமரப்பன் வெளியே காத்திருப்பான் என்ற ஞாபகம், கண்ணா யிரத்தின் திடீர் வரவும் அவனை அங்கிருந்து புறப்படச் செய்தன. படியேறும்போது கண்ணாயிரமும் அவனும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ள நேர்ந்தது.

"என்னப்பா இது? உனக்கு ஒரு வேலை பார்த்துத்தரச்சொல்லி உன் தந்தை என்னை நச்சரித்துக்கொண்டிருக்கிறார். நீயானால் நாட்டியக் கச்சேரி மேடையைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறாய்?" என்று கண்ணாயிரம் தம்முடைய கீழ்த்தரமான வம்பை ஆரம்பித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/177&oldid=595160" இலிருந்து மீள்விக்கப்பட்டது