பக்கம்:பொன் விலங்கு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

17

கார்டும் ஒருநாள் பயணத்துக்கான துணிமணிகளும் சோப்பும் சீப்பும்தான் இந்த சூட்கேஸில் இருக்கின்றன. பிறருடைய பணத்தைத் திருடினால் அதை நீ உன்னுடையதைப் போல் வைத்துக் கொண்டு செலவழிக்க முடியும். பிறருடைய படிப்பையோ பட்டத்தையோ திருடினால் ரூபாய் நோட்டைப்போல் அவற்றைச் செலவழித்து நீ ஒரு பயனும் பெறமுடியாது. வயிற்றுக்கு இல்லாமல் ஏழையாகி விடலாம். ஆனால் பண்பினால் ஏழையாகிவிடக்கூடாது" என்று சட்டைப் பைக்குள் கையை விட்டு அங்கு நாணயங்களாகக் கிடந்த அத்தனை காசுகளையும் அரை ரூபாய் கால் ரூபாய்களையும் அந்தப் பையனின் கைகளில் அள்ளித் திணித்தான் சத்தியமூர்த்தி, பையன் ஒன்றும் புரியாமல் மலைத்துப் போய் நின்றான்.

தன்னுடைய சூட்கேலை மூடிக்கொண்டு சத்தியமூர்த்தி மறுபடியும் வெயிட்டிங் ரூமுக்குத்திரும்பி வந்தபோது அது இருளில் ஆழ்ந்து கிடந்தது. தூங்குகிறவர்களின் குறட்டை ஒலியும் தூங்காதவர்கள் புரண்டு படுக்கும் ஓசையுமாக இரவு பதினோரு மணிக்குமேல் ஒரு மலையடிவாரத்து இரயில் நிலையத்துச் சூழ்நிலை எப்படி எப்படிச் சோர்ந்து போயிருக்க முடியுமோ, அப்படிச் சோர்ந்து போயிருந்தது அது. அவன் திரும்பி வருவதற்குள் முன்பு அவன் படுத்திருந்த கட்டிலை வேறொருவர் ஆக்கிரமித்துக்கொண்டிருந்ததன் காரணமாகப் படுக்க வழியின்றி அவன் நாற்காலியிலேயே உட்கார வேண்டியதாயிற்று.

'படிக்க வேண்டிய வயதில் படிப்புக்கும் வழியின்றி, பசிக்கும் வழியின்றி, இப்படித் திருட்டுத் தொழிலுக்குத் தயாராகும் சிறுவர்கள் பெருகப் பெருக இந்த தேசத்தின் சமுதாய வாழ்வில் எதனாலும் தீர்க்க முடியாத நோய் பெருகுகிறது. பத்தியமில்லாமல் மருந்து சாப்பிடுவதுபோல் இத்தகைய அடிப்படை நோய்களைத் தீர்க்காமல் வேறு வளர்ச்சிகளுக்குத் திட்டமிடுவதில் பயனென்ன?' -என்று எண்ணத்தொடங்கியிருந்தான் சத்தியமூர்த்தி, இந்தத்தேசம் முன்னேற ஒரேவழிதான் உண்டு. பிறருடைய உணவைப் பங்கிட்டுக் கொள்ளும் மனிதர்களைப்போல் பிறருடைய பசியைப் பங்கிட்டுக்கொள்ளும் மனிதர்களும் பெருகவேண்டும். ஆனால் இந்தத் தேசத்தின் துர்பாக்கியமோ என்னவோ, இங்கு மற்றவர்களுடைய உணவைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/19&oldid=1405625" இலிருந்து மீள்விக்கப்பட்டது