பக்கம்:பொன் விலங்கு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

பொன் விலங்கு

பங்கிட்டுக் கொள்ளும் மனிதர்களே அதிகமாக இருக்கிறார்கள். மற்றவர்களுடைய பசியைப் பங்கிட்டுக்கொள்ளும் மனிதர்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள் என்று நினைத்து நினைத்து மனம் தவித்தான் அவன். 'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்'-என்று பாரதி பாடியிருப்பதும் ஞாபகம் வந்தது. இப்படியே எத்தனை எத்தனையோ விதமான சிந்தனைகளில் நீந்தியே இரவைக் கழித்துவிட்டான்.

அங்கே அந்த மலையடிவாரத்து இரயில் நிலையத்தில் சூரியோதயம் மிகமிக அழகாயிருந்தது. ஒரு காரியத்தை ஆவலோடு எதிர்பார்த்துத் தூங்காமல் விழித்திருந்து தவித்தபின் விடிகிற விடியற்காலைக்குக் கவர்ச்சியும் அழகும் அதிகம். மனித இதயத்தைப் பலவிதமான சிந்தனைகளால் தவிக்கத் தவிக்கப் படுத்தியபின் மெல்ல மலர்கிற காலை விலைமதிப்பற்றதாக இருப்பதைச் சத்தியமூர்த்தி பலமுறை உணர்ந்திருக்கிறான். இரயில் நிலையத்து வெயிட்டிங் ரூமிலேயே அவசர அவசரமாக நீராடி உடை மாற்றிக் கொண்டு அவன் பஸ்ஸுக்குப் புறப்பட்டபோது காலை ஆறரை மணிக்கு மேலாகியிருந்தது. காலைச் சிற்றுண்டியைப் போகிற வழியிலிருந்த ஓர் ஓட்டலில் முடித்துக்கொண்டு அவன் பஸ் நிலையத்தில் நுழைந்தபோது மலைமேல் உள்ள மல்லிகைப் பந்தலுக்குப் போகிற முதல் பஸ் தயாராக நின்று கொண்டிருந்தது. பஸ்ஸில் இரண்டு பேருக்கு மட்டுமே இடம் இருந்தது. சத்தியமூர்த்தி இரண்டாவது ஆளாக அந்தப் பஸ்ஸில் ஏறிக் கொண்டான். அவனுக்கு முன்பே ஒரு வெள்ளைக்காரர் ஏறிக்கொண்டு விட்டதனால் அந்தப் பஸ்ஸில் இடம் பிடித்த கடைசிப் பிரயாணி சத்தியமூர்த்தியாக இருந்தான். இன்னும் இரண்டு விநாடிகள் தாமதித்து வந்திருந்தால் அதுவும் தவறித்தான் போயிருக்கும். நல்ல வேளையாக அப்படி நேரவில்லை. .

பஸ் புறப்பட்டது. அந்த அதிகாலை நேரத்தில் முகத்தில் சில்லென்று வந்து வீசும் குளிர்ந்த காற்றில் சிலிர்த்துக் கொண்டே பயணம் செய்வது சுகமாக இருந்தது. இருபுறமும் அடர்ந்து செழித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/20&oldid=1405637" இலிருந்து மீள்விக்கப்பட்டது