பக்கம்:பொன் விலங்கு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 2O7

'உங்களுடைய இதயத்தில் மண்டிக் கிடக்கும் வேதனைகளைக் கிளறி விடுவதாக என்னுடைய கேள்வி அமைந்திருந்தால் அதற்காக நான் வருத்தப்படுகிறேன். கண்ணாயிரத்தை நீங்களே சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அதிகமாக நம்பி ஏமாந்து போகக் கூடாது' என்று அவளுக்கு எச்சரிக்கை செய்தபோது சத்திய மூர்த்தியின் மனம் தன்னைத் தானே குத்திக் காட்டியது. 'கண்ணாயிரத்தை நம்பி ஏமாந்து விடக் கூடாது என்று மோகினிக்கு அறிவுரை கூறிக்கொண்டு நிற்கிற நானே என் தந்தையிடம் இதை வற்புறுத்திக் கூற முடியாமல் போய் விட்டதே' என்று நினைத்துப் பெருமூச்சு விட்டான் அவன். சிறிது நேரம் கழித்து மீண்டும் அவளே அவனிடம் பேச ஆரம்பித்தாள். "உங்களை நான் இன்று சந்திக்க விரும்பிய காரியம்...' என்று சொல்லிக் கொண்டு தயங்கித் தயங்கி நடந்து போய்க் கூடத்தில் இருந்த அந்த முருகன் படத்துக்குக் கீழே நின்றாள் அவள். நாற்காலியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அவனும் அவளோடு எழுந்துபோய் நின்றான். அப்போது அவள் அவனே எதிர்பார்த்திருக்க முடியாத புதுமையான காரியம் ஒன்றைச் செய்தாள்.

'இந்தக் கையால்தான் என்னைக் காப்பாற்றி எனக்கு அபயமளித்தீர்கள் நீங்கள் என்னுடைய ஞாபகமாக இது இந்தக் கையில் இருக்கட்டும்" என்று தன் வலது உள்ளங்கையில் அதுவரை மூடி வைத்திருந்த நீலக் கல் மோதிரம் ஒன்றை அவனுடைய வலதுகரத்து விரலில் தானே கைப்பற்றி அணிவித்தாள் மோகினி. இன்பகரமான அந்த அதிர்ச்சியில் ஓரிரு கணங்கள் தயங்கியபின், "ஞாபகம் ஒரு பக்கத்தில் மட்டும் இருந்து பயனில்லை! இரண்டு பக்கத்திலும் அந்த ஞாபகம் நிரம்பியிருக்கவேண்டும்' என்று கூறியவாறே தன் வலக்கரத்தின் மற்றொரு விரலில் ஏற்கெனவே இருந்த வேறோர் மோதிரத்தைக் கழற்றி நிலாக் கொழுந்து போல் வனப்பு மிக்கதாயிருந்த அவளுடைய மோதிர விரலில் பூட்டினான் சத்தியமூர்த்தி. வெட்கமும் முறுவலுமாக அவள் முகம் அவனை நோக்கி நிமிர்ந்த வேளையில் அவன் முகமும் அவளை நோக்கி ஏறிட்டுப் பார்த்தது. ஒருவர் அறியாமல் மற்றொருவர் பார்க்க முயன்று இருவருமே பார்த்துக் கொண்ட அந்த நிலையில் கள்ளத்தனமானதொரு மகிழ்ச்சி பிறந்தது. :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/209&oldid=595233" இலிருந்து மீள்விக்கப்பட்டது