பக்கம்:பொன் விலங்கு.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 பொன் விலங்கு

சத்தியமூர்த்திசாருக்கும் ஏதாவது தகராறாபாரதி?" என்பதாகத்தான் இருந்திருக்க முடியும் என்று அவனால் இருந்த இடத்திலிருந்தே அநுமானம் செய்ய முடிந்தது. அபேட்சை மனுக்களை வாங்கவேண்டிய தேதி முடிந்துவிட்டதனால் வந்திருந்த மூன்று அபேட்சை மனுக்களையும் ஏற்றுக்கொண்டு நோட்டீஸ் போர்டில் அறிவிப்பை ஒட்டச் செய்துவிட்டான் சத்தியமூர்த்தி. அந்தந்த அபேட்சகர்களே விரும்பிக் கேட்டிருந்தபடி புலி கோவிந்தனுக்கு 'ஸ்கூட்டர் வாகனச் சின்னமும், இன்னொரு மாணவனுக்குச் சைக்கிள் சின்னமும், பாரதிக்கு ரோஜாப்பூச் சின்னமும் தேர்தல் அடையாளங் களாகக் கொடுக்கப்பட்டிருந்தன.

ஏதோ பொதுத் தேர்தல் நடப்பதுபோல் கல்லூரி எல்லைக்குள் கூட்டமும் விளம்பரமும் பிரசாரச் சொற்பொழிவுகளும் தடயுடலா யிருந்தன. தரையில் சுண்ணாம்பினால் எழுதியும், சுவரொட்டிகள் அச்சடித்து ஒட்டியும், கூட்டம் போட்டுப் பேசியும் மாணவர்களின் ஆர்வம் பிரமாதப்பட்டுக் கொண்டிருந்தது. மூன்றாவது நாள் மாலையில் தேர்தல் வாக்குச் சீட்டுப் பதிவு நடைபெறுவதாக இருந்ததால் அதற்கு முந்தி இரண்டு தினங்களுக்குள்ளேயே மாணவர்கள் தங்களுடைய எல்லா விளம்பர வேலைகளையும் முடித்துக்கொண்டு விடவேண்டுமென்று தேர்தல் அறிக்கையில் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. சைக்கிள் சின்னத்திற்குரிய மாணவன் கடைசி நேரத்தில் என்ன காரணத்தாலோ மனம் மாறித் தன்னுடைய அபிமானிகளிடமும், அனுதாபிகளிடமும் பாரதியை ஆதரிக்கும்படி வேண்டுகோள் விடுக்கத் தொடங்கியிருந்தான். அவனுடைய ஆசை எப்படியாவது புலிகோவிந்தனைத் தோற்கும்படி செய்ய வேண்டுமென்பதுதானாம். அதனால்தான்விட்டுக் கொடுத்துப் புலி கோவிந்தனுக்கு எதிராகப் பாரதியின் கைகளை வலிமைப்படுத்தும் வேலையை மேற்கொண்டிருந்தான் சைக்கிள் சின்னத்திற்குரிய மாணவன். முடிவில் ஸ்கூட்டருக்கும், ரோஜாப் பூவுக்கும் கடுமையான போட்டிமூண்டிருந்தது. கல்லூரி மைதானத்தில் இரண்டு கட்சிக்காரர்களும் தீவிரமாக விளம்பரம் செய்யலானார்கள். ரோடுகளில் சுண்ணாம்பினால் எழுதினார்கள். போஸ்ட்டர்கள் அச்சிட்டு ஒட்டினார்கள். துண்டுப் பிரசுரங்களும் அச்சிட்டுக் கொடுத்தார்கள். கூட்டம் போட்டுச்சொற்பொழிவுகள் செய்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/364&oldid=595574" இலிருந்து மீள்விக்கப்பட்டது